வங்கி ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

bank employees-STRIKEவங்கி ஊழியர்களுக்கு 25 சதவிகித ஊதியஉயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு அழைத்தது.

இதன்படி மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் ஆலோசகர் மித்ராவுடன், 12 வங்கி ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் வெங்கடாசலம், எல்.பாலசுப்பிரமணியன், நாகராஜன் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொழிலாளர் நல அமைச்சகத்தில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கையான 25 சதவிகித ஊதிய உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்து வருகிற 10-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், எல்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு வழங்கப்படாததால், இந்திய வங்கிகளின் நிர்வாகத்துடன் தொடர்ந்து 13 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம்.

கடந்த முறை ஊதிய உயர்வு 17.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வாராக்கடன் அதிகரிப்பு, லாபம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு வழங்க வங்கிகளின் நிர்வாகம் மறுத்து வருகிறது.

ஆனால் 2012-2013-ம் ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 943 கோடி மொத்த லாபம் கிடைத்துள்ளது. இதில் வாராக்கடன் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி போனாலும், ரூ.50 ஆயிரம் கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. எனவே எங்கள் நியாயமான கோரிக்கையை பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 10-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவு கிட்டவில்லை என்றால் நாடு தழுவிய அளவில் எங்கள் வேலைநிறுத்தம் 12-ந் தேதியன்று நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top