மராட்டிய சட்டசபையில் 12-ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் பட்னாவிஸ்

Devendra-Fadnavisமராட்டிய மாநில முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் வரும் 12-ம் தேதி சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் ஒரு எம்.எல்.ஏ. சமீபத்தில் இறந்துப்போன சூழ்நிலையில் சட்டசபையில் பா.ஜ.க.வின் தற்போதைய செல்வாக்கு 121 எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலையில் உள்ளது.

ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தங்களுக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. முன்னர் அறிவித்ததால், அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்த மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆளும்கட்சி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் கெடு அளித்திருந்தார்.

இதன் அடிப்படியில் வரும் 10-ம் தேதி மராட்டிய சட்டசபை கூடுகின்றது. தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்கின்றனர். இதனையடுத்து, 12-ம் தேதி ஆளும்கட்சி தனது ஆட்சியின்மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன் வைக்கும். அப்போது தேவேந்திர பட்னாவிஸை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்குகளின் மூலம் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள்.

இதனையடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சிக்கு வெளியில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக 41 இடங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும், 63 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள சிவ சேனாவுக்கு சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு வழங்கப்பட்டால், நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் எச்சரித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top