அரியானாவில் பா.ஜனதா ஆட்சி: கேப்டன் அபிமன்யூ முதல்-மந்திரி ஆகிறார்?

19821d8c-e58f-4ac6-a6ce-0e4db5cdfe5d_S_secvpfஅரியானாவில் கேப்டன் அபிமன்யூ முதல்–மந்திரி ஆகிறார். மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்–மந்திரியாகும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடந்த அரியானா, மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 47 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் முழு மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. காங்கிரசுக்கு 15 இடங்களே கிடைத்தன. சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்று 2–வது இடத்தை பிடித்தது. இங்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

மராட்டியத்தில் மொத்தம் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க வேண்டுமானால் 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பா.ஜனதா 122 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு இன்னும் 23 இடங்களே தேவை.

தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா தொகுதி உடன்பாடு சிக்கல் காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டது. அந்த கட்சி பா.ஜனதாவை நாங்களாக வலிய சென்று ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளது. சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் 42 தொகுதியிலும், காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்துள்ளது.

சுயேச்சைகள் 7 பேரும், சிறிய கட்சிகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவர்களும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளனர்.

இதையடுத்து அரியானாவிலும், மராட்டியத்திலும் முதல்–மந்திரிகளை தேர்வு செய்வதில் பா.ஜனதா தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அரியானாவில் முதல்– மந்திரியை தேர்வு செய்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமையில் மேலிட குழு சண்டிகார் விரைந்துள்ளது. அவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்–மந்திரியை தேர்வு செய்கிறார்கள்.

அரியானாவில் முதல்– மந்திரி பதவிக்கு கேப்டன் அபிமன்யூ, மனோகர் லால் கத்தர் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இதில் கேப்டன் அபிமன்யூவுக்கு முதல்–மந்திரியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே போல் மராட்டியத்தில் மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், செய்தி தொடர்பாளர் ஜெ.பி. நட்டா ஆகியோர் மும்பை சென்றுள்ளனர். மராட்டியத்தில் நிதின்கட்காரி முதல்–மந்திரி ஆவார் என்று கூறப்பட்டது. அவர் தனக்கு மாநில அரசியலில் விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டார்.

அங்கு முதல்–மந்திரி பதவிக்கு மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சி தலைவர் ஏக்நாத் கட்சே, மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் வினோத்தாவ்டே, மறைந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா முண்டே ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

இதில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவரே முதல்– மந்திரியாக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top