ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Jayalalithaஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் இன்று (17ஆம் தேதி) விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. பொதுவாக இதுபோன்ற முக்கியமான மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வருவது வழக்கம். அதன்படியே முதலாவது அமர்வில் 65வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top