ஈழ மக்கள் இனப்படுகொலையில் இந்தியாவின் துரோகத்தை மறைக்கும் புலிப்பார்வை!

IMG_20141013_123115தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், பாலகன் பாலச்சந்திரனை தவறாக சித்தரித்தும் தயாரிக்கப்பட்டுள்ள புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடும் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

கடந்த திங்களன்று காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டமைப்பினரின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி அன்று மாலை 6 மணி அளவில் பிரசாத் திரையரங்கில் கூட்டமைப்பிற்கு திரையிட்டு காட்டுவதாக அப்படத்தின் இயக்குனர் கூறியிருப்பதாக பண்ருட்டி.தி.வேல்முருகன் கூறினார்.எனவே அப்படத்தை பார்த்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படுவதாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த திங்களன்று மாலை புலிப்பார்வை திரைப்படம் பிரசாத் திரையரங்கில்  கூட்டமைப்பினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த திரையிடலில் கூட்டமைப்பினர் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன.

இந்த திரைப்படத்தை பார்த்த பின்பு, பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பிரயத்யோகமாக தமிழ்ஸ் நவ் இணையதளத்திற்கு புலிப்பார்வை திரைப்படம் குறித்து கூறியதாவது,

புலிப்பார்வை படம் துவக்கத்திலேயே இந்திய அரசின் படம் அல்ல என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்கள். யுத்தகளத்தில் எடுத்த முதல் தமிழ் சினிமா என்றும் சொல்கிறார்கள்.அப்படியானால் ‘எல்லாளன்’ திரைப்படம் என்ன என்ற கேள்வி முதலில் எழுந்தது.

ellalan

இந்த படம் முழுக்க முழுக்க பாலசந்திரனை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் தலைப்பு சொல்லும் புலிப்பார்வை என்பது பாலசந்திரன் இறுதி பார்வைதான், அது புலிப்பார்வை அல்ல அது போர்களத்தில் படுகொலை செய்யப்பட்ட பல அப்பாவி சிறுவர்களின் பரிதாபபார்வை. அதைதான் இவர்கள் புலிப்பர்வை என்று மறைக்க பார்க்கின்றனர்.

இந்த படத்தின் கதை இரண்டு பாதைகளில் சொல்லப் படுகிறது. ஒன்று பாலசந்திரனை பின் தொடர்ந்தும், மற்றொன்று ஒரு போரளியின் காதலை பின் தொடர்ந்தும் செல்கிறது.

இதில் வறுமையில் தள்ளப்பட்ட ஒரு போரளியின் தங்கை கண்ணி வெடி எடுக்கும் பணியில் ஈடுபடுகிறார். இந்த இடத்தில் போராளிகள் கண்ணி வெடி எடுக்க மக்களை பயன்படுத்தினர் என்ற அவதூறை பரப்ப முயல்கிறார்கள்.

ஒரு தாக்குதலில் தன் அண்ணனும் இறந்து போன பின் அந்த பெண் பேசும் வசனம் மிக முக்கியமானது நாம் “ஏன் போராட வேண்டும், நாம் ஏன் சாகவேண்டும்”, நாம் இந்தியாவிற்கு செல்வோம் என்கிறாள். போராடாவிட்டால் சாக தேவை இல்லை என இவர்கள் சொல்ல வருகிறார்கள். இந்த போராட்டம் தான் அந்த பெண்ணை அனாதை ஆக்கியது போல சித்தரிக்க முயகிறார்கள்.

pic-1

பாலசந்திரனை மையமாக வைக்கும் கதையின் போக்கில், பாலசந்திரன் கைது செய்யப்பட்டு வைத்திருக்கும் ராணுவ அதிகாரி தன் மகனை பாலசந்திரனோடு ஒப்பிட்டு பார்க்கிறார். அதில் பாலசந்திரன் தைரியமானவன் என அவர்கள் காண்பிக்கும் காட்சிகள் பாலசந்திரன் என்கிற பத்து வயது சிறுவன் கொலைக்கு நீதிக்கேட்டு போராடுபவர்களுக்கு அவன் அப்பாவி அல்ல என்றும், அவன் நவீன ஆயுதங்களை பற்றி நன்கு தெரிந்தவன் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.மொத்த விடுதலை இயக்கமும் பாலவை மட்டுமே தேடுகிறது சிங்கள ராணுவம் தங்கள் நாட்டை காக்க போராடுவதாகவும் புலிகள் தலைவர் குடும்பத்திற்காக போராடுவதாகவும் காட்டியிருக்கிறார்கள்.

அதில் ஒரு இடத்தில் ஒரு போராளி உங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உங்கள் வாரிசு அவசியம் என்கிறார். இது தமிழீழ விடுதலைக்காக மக்களின் போராட்டம். அதனை மக்கள் போராட்டம் அல்ல, பிராபாகனின் தனிபட்ட போரட்டம் என காட்ட முயல்கிறார்கள். அதே போல பாலச்சந்திரனை கொன்றதாக காட்டப்படும் காட்சியில், யுத்த களத்தில் கொல்லப்பட்டதாக காட்டப்படும் உடல், என் அப்பாவின் உடல் அல்ல என்று பாலச்சந்திரன் சொல்லும் போது நடப்பதாக காட்டப்படுகிறது.

அதாவது, பாலசந்திரன் படுகொலையானது ராணுவ அதிகாரியின் சொந்த வெறுப்பினால் மட்டுமே நடந்தது என்றும், அதற்கும் இலங்கை அரசுக்கும் எந்த பங்கும் இல்லை என அவர்கள் சொல்ல வருகிறார்கள். அந்த காட்சியில் ஒரு ராணுவ அதிகாரி இந்தியா ஒரு செண்டிமெண்டான நாடு அந்த நாட்டு மக்களும் ரொம்ப செண்டிமெட்டானவங்க அவங்களுக்கு இது தெரிஞ்ச நம்மல சும்மா விட மாட்டாங்க அப்படினு சொல்லுவார். பாலச்சந்திரன் இறந்த இடத்தில் இருந்த உடை எங்கள் உடை அல்ல, இந்திய ராணுவத்திணுடையது தான் என்று போரை நடத்திய பொன்சேகா சொல்லி இருப்பதை இவர்கள் மறைக்கிறார்கள்.

தமிழீழ தலைவர் பிரபாகரனை மையப்படுத்திய சதிகள்:

கிருபாகரன் என்கிற அந்த நபர் அறிமுக காட்சி ஒரு பெரும் பிணகுவியலில் இருந்து அவர் வெளிவந்து சுடுவது போல காட்டப்படுகிறது.

பாலசந்திரன் வைக்க பட்ட இடத்தில் இருந்து, இயக்கத்திடம் கொடுக்க சொல்லி ராணுவம் அனுப்பும் போராளி சிடி யோடு தப்பித்து இயக்கத்தை கைவிட்டு காதலியோடு இந்தியாவிற்க்கு செல்ல முயலும் போது அந்தகாதல் ஜோடியை ராணுவம் துரத்துவதை, கிருபாகரன் பார்க்கிறார். அவர் ராணுவ வீரனை சுட்டு விட்டு “ போராளியை தானே ராணுவம் துரத்தும் பொன்னு பின்னாள் போகிரவனை ஏன் துரத்துகிறது என கேட்பார்” இந்த இடத்தில் ராணுவம் அப்பாவி மக்களை ஒன்றும் செய்யவில்லை என தலைவர் வாயில் இருந்தே வருகிறது. அடுத்து இயக்கத்தின் சார்பாக இதை கொடு என தன் பையில் இருந்து ஒரு தங்க பிஸ்கட் எடுத்து கொடுகிறார். மக்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கண்ணி வெடி எடுக்கும் போது தலைவர் தங்க பிஸ்கட் வைத்திருப்பதாக காட்டப்படுகிறது. 

ஒரு காயம் பட்ட போராளியை கிருபாகரன் தன் தோளில் தூக்கி செல்கிறார். அவர் பெயர் தமிழ்செல்வன். இயக்கத்தில் அரசியல் பிரிவுவை சேர்ந்த சுப தமிழ்செல்வனை குண்டு வீசி இலங்கை ராணுவத்தினர் கொன்றார்கள் என்ற குற்ற சாட்டை நாம் சொல்லி கொண்டிருக்கும் சூழலில்தான், இதில் தமிழ்செல்வன் என்ற பெயரில் ஒருவரை ஆயுத போராளியாக காட்டுகிறார்கள்.

அந்த கிருபாகரன் பேசும் வசனங்கள் இந்தியா ஒரு இந்து நாடு. அவர்களின் தேசிய விலங்கான புலியை நம் இயக்கதின் பெயராக வைத்திருக்கிறோம். சில காரணங்களால் அவர்கள் நம்மை தவறாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்மை புரிந்து கொள்ளும் காலம் வரும் அப்பொழுது அவர்கள் நமக்கென மகுடம் சூட்டுவார்கள் என்பார்.(அப்பொழுது திரையில் இந்திய வரை படத்தில் இருந்து ஒரு மகுடம் வந்து இலங்கை தமிழீழ பகுதிக்கு வரும்.. இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு என்ன என்பது நாம் அறிந்ததே. அதே போல ராமர் பாலம் பற்றிய வசனங்கள் எல்லாம் வருவது அப்பட்டமான இந்துத்துவா பிரச்சாரமே)

இறுதி காட்சியில் போராளிகளான அண்ணனையும், காதலனையும் போரில் இழந்த பெண் மனித வெடிகுண்டாக ராணுவ அதிகாரியின் வீட்டிற்கு வருகிறாள். இதில் கரும்புலிகள் குழந்தைகளும், குடும்பத்தினரும் இருக்கும் வீட்டில் தாக்குதல் நடத்துவார்கள் என சொல்ல வருகிறார்கள். இறுதியில் பாலாவை கொன்ற அதிகாரியின் மகன் தற்கொலை செய்து கொள்ளும் போது அந்த அதிகாரி நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம் என்றும் அடுத்த தலைமுறை இவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்களே, எதிரி வென்று விடுவானே என அழுவதாக படத்தை முடிக்கின்றனர்.

படத்தில் ஒரு இடத்தில் கூட இலங்கை ராணுவத்தின் இனப்படுகொலை குற்றத்தை காட்சிப் படுத்தவே  இல்லை.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் கடைசி காட்சி வரை ஒரு காட்சி கூட அனுமதிக்க பட கூடாது என்பதே எங்கள் இறுதி முடிவாகும் என்று கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top