மகாராஷ்டிராவில் ரூ.500 கோடி வறட்சி நிவாரணம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

congress-maharashtra-manifesto மகாராஷ்டிராவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான உச்சவரம்பு குறைப்பு, ரூ.500 கோடி வறட்சி நிவாரணம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

வருகிற 15 ந்தேதி நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் வெளியிட்டனர்.

மகாராஷ்டிரா மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1½ லட்சம் என்று இருப்பது ரூ.2½ லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் ஏராளமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள் வருமாறு:–

மராட்டியத்தில் வறட்சிக்கு இலக்காகும் மக்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியில் நிரந்தர நிதி அமைப்பு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு பகலில் 8 மணி நேரமும், இரவில் 10 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும்.

60 சதவீதம் அளவுக்கு சேதம் அடைந்த பயிர்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்காக ‘கிரிஷி தர்ஷன்’ என்ற பெயரில் தனி டெலிவிஷன் தொடங்கப்பட்டு அதில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள், சலுகைகள் பற்றியும், விவசாயத்தில் வெற்றிகரமான கதைகள் பற்றியும் ஒளிபரப்பு செய்யப்படும்.

மாம்பழம், முந்திரி பயிரிடும் விவசாயிகளுக்கு தனி போர்டு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும். மாநிலத்தில் குற்றச் செயல்களை ஒழிக்க அது சம்பந்தமான வழக்குகளை விசாரிகக் விரைவு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்படும். ஏழைகள் வீடு கட்டும் திட்டத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 1 லட்த்தில் இருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்படும்.

முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது வரம்பு 65–ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டு அவர்களுக்கான உதவித் தொகை ரூ. 600–ல் இருந்து ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படும். வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு 55 வயதுக்கு பிறகு ஒரே தடவையாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். ஆதிவாசிகள், நிலமற்ற மலைவாழ் மக்கள் ஆகியோரின் நலனுக்கு சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top