லங்கா ரத்னா ”தி இந்து”வின் ஊடக ஜனநாயக லட்சணம் – ஹரிஹரன்

hindu_paper-logo_ci22 செப்டம்பர் 2014 அன்று இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் பாசிச கருத்தியல் விதைப்பு வியபாரத்தை விமர்சித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தவுடன், தி இந்து பத்திரிக்கைக்கு ரோசம் வந்துவிட்ட்து, தமிழர்களின் ஜனநாயகத்தை ஒரு மீள்பார்வை என்று ஒரு கட்டுரையை Revisiting a Tamil democrat’s legacy பதிவிட்டுள்ளார்கள். அதில் 25 வருடங்களுக்கு முன்னால் இறந்து போன ஒருவரின் நினைவு நாளை யாழ்ப்பாணத்தில் நடத்த விடாமல் சிங்கள இனவெறி அரசு தடை செய்ததை விட தமிழர்களின் ஜனநாயகத்தை அசிங்கப் படுத்துவதில் தான் கட்டுரையின் நோக்கமாக கொண்டு வெளியிட்டுள்ளனர். இது வரை பல இடங்களில் ராஜனி திரணகாமேவின் நினைவு நாள் நிகழ்வு நடந்துள்ளது, ஆனால் இன்று யாழ்ப்பான பழ்கலையில் நடத்த விரும்பியதை தடை செய்துள்ளார்கள் ஆனால் அதை நோக்கிய கேள்வி எழுப்பாமல் இவர்களின் குறிக்கோளாக இவர்கள் எதிரி என்று நினைக்கும் தமிழர்கள் மீது சேற்றை வாரி வீசுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்டுரையை எழுதியுள்ளனர்.

ராஜனி திரணகாமே என் எதிரி அல்ல எனென்றால் அவர் எந்த ஒரு உயிரும் இந்த உலகத்தை விட்டு பிரிவதை விரும்பாத ஒரு மனிதர் மற்றும் மருத்துவர். 23/10/2014 தி இந்து நாளிதழ் செய்தியில் புலிகளால் கொலை செய்யப்பட்டார் என்பதை சொன்னவர்கள் யார் இந்த ராஜனி திரணகாமே என்று சொல்ல மறந்து விட்டார்கள் என்பதைவிட தங்களது ஊடக பயங்கரவாதத்தின் முகத்தை காட்டி மறைத்து இருக்கிறார்கள். ராஜினி திரணகாமே ஒரு தமிழர், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர் இவரின் அக்கா தான் பயங்கரவாத தடுப்பு சட்டம் என்ற பெயரில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்களை சிங்கள பேரினவாத அரசு கைது செய்த பொழுது, கைது செய்யப்பட்ட முதல் பெண் நிர்மலா ராஜசிங்கம். 22 மாதங்கள் எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை புலிகள் இயக்கத்தினர் தான் சிறையை தகர்த்து காப்பாற்றினர். சிங்கள காடையர்களால் வெலிக்கடை சிறையில் குட்டிமணி கொலை செய்யப்பட்ட சமகாலத்தில் சிறையில் இருந்தவர் நிர்மலா ராஜசிங்கம். சிறையில் இருந்து காப்பாற்றப்பட்ட நிர்மலா தமிழகத்திற்கு வந்து பிறகு லண்டன் சென்று இன்றும் லண்டனில் உயிருடன் வசித்துக் கொண்டிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் மீது தனது எதிர் கருத்துகளை தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளார், தமிழர்களின் ஜனநாயகம் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்வது என்றால் இது வரை தொடர்ந்து புலிகளை விமர்சிக்கும் நிர்மலாவை அதுவும் புலிகளால் கொலை செய்யப்பட்டார் என்று சொல்லப்படும் ராஜனி திரணகாமாவின் அக்கா நிர்மலாவை ஏன் கொலை செய்யவில்லை, அவரின் விமர்சிக்கும் வாயை ஏன் அடைக்கவில்லை என்று கேள்வி எழுப்ப மாட்டார்கள் இந்த ஊடகவியாதிகள்.

இதை நம் கண்ணில் இருந்து மறைத்துவிட்டு, கொயபல்ஸ் பிரசாரமான ராஜனியை புலிகளே கொலை செய்தனர் என்ற பொய் கட்டமைப்பை தொடர்ந்து வடிவமைக்கிறார்கள். அதுவும் அவரும் யாழ்ப்பாணப் பல்கலை கழக ஆசிரியர்களும் இணைந்து நடத்திய UTHR- University Teachers association of Human Rights மூலமாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை “The Broken Palmyra” முறிந்த பனை எனும் புத்தகத்தில் எந்த பக்கச் சார்பும் இல்லாமல் அனைத்து தரப்பினரின் மனித உரிமை மீறல்களை பட்டியல் இட்டு இருக்கிறார் ஆனால் அந்த புத்தகம் புலிகள் இயக்கத்தின் குற்றங்களை சொல்லியிருக்கிறது அதனால் புலிகள் தான் கொலை செய்திருப்பார்கள் என்று கட்டமைக்க விரும்புகிறார்கள் எதோ புலிகள் இயக்கம் மட்டும் தான் குற்றம் புரிந்ததாகவும் மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் போலவும் கட்டமைக்க விரும்புகிறார்கள்.

முறிந்த பனையைப் பற்றி ராஜனி திரணகாமவின் கணவரும் முன்னாள் ஜேவிபி இயக்கத்தை சேர்ந்தவருமான திரணகாமா ராஜனியில் 20ம் ஆண்டு நினைவு நாளில் பேசும் பொழுது நினைவு கூறுகிறார். “முறிந்த பனையில் ராஜனி இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், ஈபிஆர்.எல்.எஃப், புலிகள் இயக்கம், மற்றும் டெலோ அமைப்பு என்று அனைவரின் மனித உரிமை மீறல்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்” என்று தனது பதிவாக கூறியிருக்கிறார். அவரோ இல்லை ராஜனியின் பெற்றோர்களோ யாரும் புலிகள் இயக்கத்தை நோக்கி குற்றசாட்டு வைக்கவில்லை. ஆனால் இங்கிருக்கும் ஊடகங்கள் மட்டுமே ஒரு இயக்கத்தை நோக்கி குற்றசாட்டு வைக்கிறார்கள். ராஜனி திரணகாமேவின் கொலை குறித்து எங்கும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை யாராலும் விசாரிக்கப்படவில்லை. ஆனால் அது விசாரிக்கப்பட்டது போலவும் அதன் கீழாக சிலர் குற்றவாளிகள் என்று நிருபிக்கப்பட்டது போலவும் ஒரு இயக்கத்தின் மீது குற்றசாட்டு வைக்கிறார்கள். ஊடகங்கள் என்பவை போகிற போக்கில் தகவல் சொல்லும் அமைப்புகள் இல்லை தங்களால் நிருபிக்க முடியாத செய்திகளை வெளியிடக் கூடாது ஆனால் இங்கே கிசுகிசு எழுதுவது போல் செய்திகளை வெளியிடுகின்றனர். தி இந்துவிடம் புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று எந்த நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டது என்று கேட்டால் ராஜபக்சே வீட்டு அடுப்பங்கரையில் தீர்ப்பு எழுதப்பட்டது என்று சொல்வார்கள்.

முறிந்த பனை புத்தகத்தில் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது என்று சொல்பவர்கள் அதே புத்தகத்தில் 433ம் பக்கத்தில் அனந்தகிருஷ்ணன் என்ற ஊடகவியலாளரிடம் புலிகள் இயக்கம் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்த பொழுது. எனக்கு கிடைக்கும் தகவல்கள் பத்திரிக்கைகள் மூலமாகத் தான் கிடைக்கிறது அதுவும் இந்திய பத்திரிக்கைகளின் மூலமாகவே நான் தெரிந்து கொள்கிறேன் என்று ஈழத்தில் ஊடகத்துறை முடக்கப்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக இந்திய இராணுவ அதிகாரிக்கு சுட்டி காட்டியபொழுது அந்த இராணுவ அதிகாரி “டே பன்னி, நீ அதிகம் பேசுகிறாய், உன்னை சுட்டுவிடுவேன், ஒரு தோட்டாவை வீணாக்க வேண்டும் என்று பார்க்கிறேன்” என்று தனது சக ஊடகவியலாளரை ஒரு இந்திய இராணுவத்தின் அதிகாரி அசிங்கப்படுத்தியதை உணரவியலாத ஊடகங்களாகத் தான் இருக்கின்றனர்.

இதைப் போன்று இந்திய இராணுவத்தின் அனைத்து மனித உரிமை மீறல்களையும் தனது புத்தகத்தில் கூறியிருக்கிறார்கல் மனித உரிமைக்கான பல்கலைகழக ஆசிரியர் குழு. அதுவும் குறிப்பாக இந்திய இராணுவம் புதிய இலங்கை அரசுடனான ஒப்பந்தத்தின் கீழாக தாங்கள் வெளியேற வேண்டும் என்ற நிலை வந்த பிறகு செப்டம்பர் 19ம் தேதி 1989 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள். அதற்கடுத்த இரண்டு நாட்களில் ராஜனி திரணகாம கொலை செய்யப்படுகிறார், இந்திய இராணுவத்தின் அனைத்து மனித உரிமை மீறல்களை பதிவு செய்து வெளியிட்டவரை உயிருடன் விட்டுவைக்க இந்திய இராணுவம் விரும்பியிருக்குமா அதும் ஒரு படித்த பெண் செயல்பாட்டாளரின் வார்த்தைகளுக்கு எந்த அளவிற்கு உலக அளவில் மதிப்பு கிடைக்கும் என்பதை நன்றாக உணர்ந்த இந்திய இராணுவம் அவரை ஏன் கொலை செய்திருக்க கூடாது.

இந்திய இராணுவம் அங்கு இருக்கும் வரை வேண்டும் என்றால் ராஜனியை பேசவிடாமல் செய்யலாம் ஆனால் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு ராஜனி பேசினார், அதுவும் அன்றைய பிரதமர் பிரேமதாசா இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் எனும் நிலையில் பிரமேதாசா ராஜனியை உபயோகப்படுத்தி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் கிழித்தெறிந்தார் என்றால் இந்தியாவிற்கு தான் பிரச்சனை இதை உணர்ந்த இந்திய இராணுவம் ஏன் ராஜனியை கொலை செய்திருக்க கூடாது. 23ம் நவம்பர் 1987ம் அன்று வெறும் 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக தாரகா தம்பையாவை சுட்டு கொலை செய்து திருடிய இந்திய இராணுவம் ஏன் ராஜனியை கொலை செய்திருக்க கூடாது.
முறிந்த பனை புத்தகம் 766 பக்கங்கள் கொண்டது இதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த மனித உரிமைகளை பற்றி பேசுகிறது இதில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்திய இராணுவம் செய்த மனித உரிமை மீறல்களை இது வரைக்கும் எடுத்து பேசாத இந்திய ஊடகங்கள் ராஜனியின் கொலையைப் பற்றிய எந்தவித விசாரணையும் நடைபெறாத பொழுது அந்த கொலையை செய்தவர்கள் ஒரு சிலரே என்ரு ஊகமாக தொடர்ந்து பொய்யை சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் வேலையையே செய்து வருகின்றனர்.

ராஜனி திரணகம ஆரம்பித்த பெண்களுக்கான மறுவாழ்வு மையம் “பூரணி” அவரின் மறைவிற்கு பிறகு புலிகள் இயகத்தால் ஏற்று நடத்தப்பட்டது.. ஏன் முறிந்த பனை புத்தகத்தை வெளியிட்ட UTHR மனித உரிமைககன பல்கலைகழக ஆசிரியர்கள் அமைப்பு ராஜனியாலே ஆரம்பிக்கப்பட்டது இந்த அமைப்பு 2009ம் வரை தொடர்ந்து செயல்பட்டது மனித உரிமைகள் மீறலைப் பற்றி தொடர்ந்து பதிவு செய்து வந்தது ஆனால் 2009க்கு பிறகு எங்கு சென்றது என்பது தெரியவில்லை. புலிகள் இயக்கம் இருந்த வரை தங்களைப் பற்றியும் தங்களின் மனித உரிமை மீறல்களைப் பற்றியும் சொன்ன ஒரு அமைப்பை அவர்கள் செயல்பட அனுமதித்து இருந்தனர் ஆனால் 2009க்கு பிறகு ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கபப்ட்ட ஒரு அரசின் கீழாக ஒரு மனித உரிமைகளுக்கான அமைப்பு செயல்பட இயலவில்லையே அது ஏன் என்று கேள்வி எழுப்ப வக்கில்லாத லங்கரத்னா விருது பெற்ற தி இந்து நிறுவனம் எந்த விதத்திலும் யாருடைய ஜனநாயகத்தைப் பற்றியும் பேச என்ன தகுதி இருக்கிறது..


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top