ஐ.நா.சபையில் ராஜபக்சே பங்கேற்பு: செப்டம்பர் 23-ல் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

thol thirumaவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தில் மனித உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளாகியுள்ள சிங்கள அதிபர் ராஜபக்சே கலந்துகொண்டு உரையாற்றப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா. பேரவையில் ராஜபக்சே உரையாற்றுவது அவர் மீதான சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்குப் பெரும் தடையாக இருக்கும். ஆகவே, ஐ.நா. பொதுப்பேரவையில் ராஜபக்சே பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் இதில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் போராடி வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில், டெசோ அமைப்பின் தலைவர் கலைஞரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருகிற 23–ந் தேதி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ராஜபக்சே ஐ.நா. பேரவையில் பங்கேற்பதைக் கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 24–ந் தேதி தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனப் பேரணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கிறது.

ராஜபக்சே ஐ.நா. பொதுப்பேரவையில் பேசுகிற நாளான வருகிற 25–ந் தேதியன்று ஒட்டுமொத்தத் தமிழர்களும் அந்நாளை துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கறுப்புச் சின்னங்கள் அணிவது, கறுப்புக்கொடிகளை ஏற்றுவது, கறுப்பு ஆடைகள் அணிவது போன்ற வகையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலைஞரின் போராட்ட அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதுடன் கறுப்புக்கொடி ஏற்றுவது, கறுப்பு ஆடை அணிவது ஆகிய நடவடிக்கைகளில் பங்கேற்கிறது. தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கில் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top