கடும் எதிர்ப்பையும் மீறி கத்தி பட பாடல்கள் இன்று வெளியீடு!

kaththiஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், பிரபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கத்தி. இதனை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா தயாரிக்கிறார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல தொழில் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜாவுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் நீண்ட காலமாக வியாபாரத் தொடர்பு இருப்பதாக பெறப்பட்ட ஆதாரப்பூர்வமான தகவலின் பேரில், மாணவ அமைப்பினரும், நூற்றுக்கும் அதிகமான தமிழ் ஆதரவு அமைப்புகளும் கத்தி படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. மேலும் இப்படத்தை ராஜபக்சே கூட்டாளி லைக்கா நிறுவனம் சார்பில் வெளியிடக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பட அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘‘நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். பல்வேறு நாடுகளில் தொழில் செய்து சம்பாதிக்கிறேன். தொண்டு நிறுவனங்கள் மூலம் நலிந்த ஏழைகளுக்கு உதவிகளும் செய்து வருகிறேன். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறேன்.

ராஜபச்சே பணம் கொடுத்து என் மூலம் கத்தி படத்தை தயாரிக்கிறார் என்று அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தையும், ராஜபக்சேவையும் இணைத்து போலி படங்களை தயார் செய்து இன்டர்நெட்டில் விஷமிகள் பரவவிட்டுள்ளனர். எங்கள் நிறுவனத்தின் மீதுள்ள நன்மதிப்பை குலைக்கவும் வணிக ரீதியாக விளம்பரம் தேடவுமே இவ்வாறான எதிர்ப்புகள் கிளப்பப்பட்டு உள்ளன”. என அவர் தெரிவித்தார்.

ஆனால், சுபாஷ்கரனின்  இந்த பேச்சை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகள் ராஜபக்சேவின் லைக்கா நிறுவனத்துடனான தொடர்பை ஆதாரப்பூர்வமாக  நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னையில் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி சென்னையில் இன்று மாலை கத்தி படத்தின் பாடலை வெளியிட உள்ளனர். இதனை கண்டித்து மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்புகள் பலவும் இன்று பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தில் முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top