நவாஸ் ஷெரிப் மீது இரண்டாவது கொலை வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

PM-Nawaz-Sharif-to-chair-a-high-level-meeting-today-in-Karachi1பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக, தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்துக்கொண்டு, அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன்னர் கடந்த மாதம் 14-ம் தேதியில் இருந்து ஷெரீப் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், லாகூரில் ஜூன் 17ம் தேதி பாகிஸ்தான் அவாமி தெக்ரிக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன்பு இருந்த தடுப்புகளை போலீசார் அகற்ற முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் அக்கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின்போது 2 பெண்கள் உள்பட 14 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் அவாமி தெக்ரிக் கட்சி குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஷ் ஷெரிப் மற்றும் 19 பேருக்கு எதிராக லாகூர் கோர்ட்டில் அக்கட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த லாகூர் கோர்ட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது தம்பி ஷபாஷ் ஷெரிப் உள்ளிட்ட 21 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது ஒரு மாதத்தையும் கடந்து நடைபெற்று வரும் பாராளுமன்ற முற்றுகையின்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசாரும், ராணுவத்தினரும் தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றை பிரயோகித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தாஹிருல் காத்ரி கட்சியை சேர்ந்த இரு தொண்டர்கள் பலியாகினர். இந்த படுகொலைகளுக்கு காரணமான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், உள்துறை, பாதுகாப்பு துறை, ரெயில்வே துறை மந்திரிகள் மற்றும் போலீஸ் துறை தலைவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் தாஹிருல் காத்ரி வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாஹிருல் காத்ரியின் வழக்கறிஞர் மற்றும் அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதப் பிரதிவாதங்களை ஆய்வு செய்த நீதிபதி, பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்டவர்களின் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கையும் சேர்த்து மொத்தம் 16 பேரை கொன்றதாக நவாஸ் ஷெரிப்பின் மீது 2 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாட்டின் சட்டதிட்டங்களின்படி, அரசு பதவி வகிக்கும் ஒருவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதால் அவரது பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

அதே வேளையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுமேயானால், தண்டிக்கப்பட்டவர் அதற்குப் பின்னர் அரசு பதவிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top