தமிழக மீனவர்களின் படகுகளை ஒரு போதும் திருப்பி தரமாட்டோம்: ராஜபக்சே அறிவிப்பு

RAJAPAKSAகடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிடித்துச் செல்கிறது. பின்னர் மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு அவர்களது மீன்பிடி படகுகளை ஒப்படைக்க மறுத்து வருகிறது.

இதுபற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள். மேலும் மடிவலையை பயன்படுத்தி கடல் அடியில் உள்ள மீன் வளத்தை சுரண்டி நாசப் படுத்துகிறார்கள். இது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் பெரும்பான்மை தமிழ் மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கிறது. இலங்கையின் பொருளா தாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. என்றாலும் தினக்கூலிகளாக மீன்படி தொழிலில் ஈடுபடும் அப்பாவி மீனவர்களை விடுதலை செய்து விடுகிறோம்.

ஆனால் மீன்பிடி படகுகளை திரும்ப கொடுக்க முடியாது. அவ்வாறு படகுகளை திரும்ப கொடுத்தால் அதே படகில் மீண்டும் வந்து மீன் பிடித்து அதே தவறை திரும்பவும் செய்வார்கள்.

இலங்கை கடல் எல்லைக்குள் ஒன்றிரண்டு மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான படகில் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மோசமானவர்கள். சுற்றுச் சூழலையும் நாசம் செய்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கும் மோசமானவர்கள்.

மீன்களுக்கு எல்லைகள் கிடையாது. மீனவர்கள் தான் மீன்கள் இருக்கும் இடத்தை நாடிச் செல்கிறார்கள். இந்தியா–இலங்கை உறவில் இந்த பிரச்சினையைதான் தீவிரமாக கவனிக்க வேண்டியுள்ளது.

இருநாட்டு மீனவர்களும் கூடிப்பேசி வருகிறார்கள். கடைசியாக இருநாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை மே மாதம் கொழும்பில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தேக்க நிலையில் உள்ளது.

இவ்வாறு ராஜபக்சே கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top