அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புருனோ ஜோடி சாம்பியன்!

Sania Mirza-Bruno Soaresஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி, அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பீர்ஸ் , மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்சாலெஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில், சானியா – சோரஸ் ஜோடி சிறப்பாக விளையாடிய 6-1 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட ஸ்பீர்ஸ், கொன்சாலெஸ் ஜோடி, சானியா ஜோடிக்கு சவால் விடுத்தது. அந்த ஜோடி 6-2 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றியது.

இரண்டு ஜோடியும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. டை பிரேக்கரில், 9-4 என முன்னிலை பெற்றிருந்த சானியா ஜோடி, கடைசிக் கட்டத்தில் செய்த தவறுகளால் நெருக்கடிக்கு உள்ளானது. இரு ஜோடிகளும் 9-9 என்ற நிலையை எட்டியதால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முடிவில் 11-9 என்ற கணக்கில் சானியா, சோரஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012ல் பிரெஞ்ச் ஓபனிலும் மகேஸ் பூபதியுடன் இணைந்து அவர் பட்டம் வென்றிருந்தார். சானியா மிர்சாவும், புருனோ சோரசும் முதன் முறையாக இணைந்து விளையாடியபோதே பட்டம் வென்றுள்ளதால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சேர்ந்து விளையாட இவர்கள் முடிவு செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top