5வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!

ajinkya-rahane-ton-englandஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. கார்டிப்பில் நடந்த 2–வது ஆட்டத்தில் 133 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3–வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 4–வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

நாளைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 4–0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய வீரர்கள் ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதே உத்வேகத்துடன் ஆடி கடைசி ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளில் இந்திய வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தொடரை வென்றதால் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு தோனி சான்ஸ் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர்குமாருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதே நேரம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற கடுமையாக போராடும். அந்த அணி வீரர்களை மாற்றம் செய்தும் பலன் அளிக்கவில்லை. ஹாட்ரிக் தோல்வியால் அந்த அணி கேப்டன் கூக் நெருக்கடியில் உள்ளார். இதனால் இந்த ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடைய அவர் விரும்புகிறார். காயம் காரணமாக பெல் நாளைய போட்டியில் ஆடமாட்டார்.

இரு அணிகளும் நாளை மோதுவது 91–வது போட்டியாகும். இது வரை நடந்த 90 ஆட்டத்தில் இந்தியா 50 போட்டியிலும், இங்கிலாந்து 35 போட்டியிலும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top