இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

rahanedhawanapmஇங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரஹானே, தவன் ஆகியோரது அபார பேட்டிங்கினால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

207 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா 30.3 ஓவர்களில் எட்டியது. மேலும் கடைசி பந்தை ஷிகர் தவன் சிக்சர் அடிக்க இந்தியா 212/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார்.

ரஹானே 100 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 106 ரன்களை விளாச, ஷிகர் தவன் 81 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிச்கர்களுடன் 97 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கோலி 3 பந்துகளில் 1 ரன் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

ரஹானே, தவன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 28.4 ஓவர்களில் 183 ரன்களைச் சேர்த்தனர். ரஹானே கடினமான பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டியவர் கடைசியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் குர்னி வீசிய தாழ்வான புல்டாசை கவர் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹானேயின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அவுட் ஆகும் போது தவான் 69 ரன்களில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையாக ஆடிய ரஹானே, தவன், 4 ஓவர்களில் 4 ரன்களையே எடுத்திருந்தனர்.

5வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை சற்றே சச்சின் பாணியில் மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார் ரஹானே. அடுத்த பந்தை லெக் சைடில் ஆண்டர்சன் வீச அதுவும் பவுண்டரி. அடுத்த பந்தை தடுத்தாட, அடுத்த பந்து ஷாட் கவர், மிட் ஆஃப் இடைவெளியில் அபார பவுண்டரி சென்றது. அடுத்த பந்து மீண்டும் மிட்விக்கெட்டில் ஒரு ஷாட் அதுவும் பவுண்டரி. ஒரே ஓவரில் ஆண்டர்சனை 4 பவுண்டரிகள் விளாசினார் ரஹானே.

அதே போல் தவன் 10வது ஓவரில் வோக்ஸ் பந்து வீச்சை நன்றாக கவனித்தார். 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் வர 4 ஓவர்களில் 4 என்று இருந்த இந்தியா 10வது ஒவரில் 57/0 என்று வேகம் கூட்டியது. ரஹானே தனது முதல் சிக்சரை ஸ்டீவ் ஃபின் பந்தில் அடித்தார். அது ஒரு ஃபிரண்ட் ஃபுட் புல்ஷாட். ஆட்டத்தின் 18வது ஓவரில் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளில் படுத்தி எடுத்த மொயீன் அலியின் ஓவரில் ரஹானே ஸ்லாக் ஸ்வீப் செய்து மிகப்பெரிய சிக்சர் அடித்து தனது அரைசதத்தை ஸ்டைலாக எடுத்தார்.

பிறகு அதனைக் கொண்டாடும் விதமாக பிளிக் செய்து பவுண்டரி அடித்தார். பிறகு ஆண்டர்சன் பந்தை மேலேறி வந்து அபார டைமிங்கில் லாங் ஆனில் அதிர்ச்சியளிக்கும் சிக்சர் ஒன்றை அடித்தார். இப்படியே போய்க்கொண்டிருக்க ஆண்டர்சன் பந்தை ஒரு சுழற்று சுழற்றி சிக்சருக்கு விரட்டிய தவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரைசதம் கண்டார்.

பிறகு மொயீன் அலியை மேலும் ஒரு சிக்சரை அடித்தார் ரஹனே. இம்முறை நடந்து வந்து பவுலர் தலைக்கு மேலே சிக்சர் அடித்தார். பிறகு குர்னி ஓவரில் தவான் மேலும் ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசினார். 27 ஓவர்களில் இந்தியா 172 ஆனது.

ஆட்டத்தின் 28வது ஓவரில் பைன்லெக் திசையில் தட்டி விட்டு 2 ரன்களை விரைவில் ஓடி எடுத்து ரஹானே சதம் கண்டார். அதன் பிறகு 106 ரன்களில் அவர் அவுட் ஆனார். தவன் அதிரடியை தன் பேட்டிற்கு மாற்றிக்கொண்டார். வோக்ஸ் வீசிய ஒரே ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 17 ரன்களை விளாசினார் தவான்.

ஆட்டத்தின் 31வது ஓவரில் குர்னி வீசிய பந்தை பவுண்டரி அடித்த தவன், கடைசி வெற்றிக்கான ஷாட்டை லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார். இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. ரஹனே ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆண்டர்சன் 6 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் பவுண்டரி சிக்சர்களே ஆதிக்கம் செலுத்தியது. வோக்ஸ் 4 ஓவர்களில் 40 ரன்கள். இங்கிலாந்து சந்தித்த மிக மோசமான ஒருநாள் தோல்விகளில் இதுவும் ஒன்று ஆனது.

91 ஒருநாள் போட்டிகளில் வென்று அசாருதீனின் கேப்டன் சாதனையை முறியடித்து தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top