ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இங்கிலாந்து தடுமாற்றம்!

England v India - Royal London One-Day Series 2014இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் பர்மிங்ஹாமில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, முற்றிலும் மாறுபட்ட இளம் வீரர்களுடன் ஒருநாள் ஆட்டத்தில் அசத்தி வருகிறது. முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் தடுமாறி வருகிறது. ஸ்வான் உள்பட முன்னாள் வீரர்கள், குக் கேப்டன் பொறுப்பில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணி சமீப காலமாக ஒருநாள் தொடரில் தடுமாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் சாதிக்க முடியாது என்பது முன்னாள் வீரர்களின் வாதம்.

ஆனால், இந்திய அணி உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக இந்தத் தொடரை சிறப்பாகத் தொடங்கி உள்ளது. சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இருப்பினும் நிலையான தொடக்கம் அமைவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ரோஹித் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, கடந்த ஆட்டத்தில் ரஹானே தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

ஆனால், தற்போது முரளி விஜயும் அணியில் இடம்பெற்றிருப்பதால், அடுத்த ஆட்டத்தில் அவர் தொடக்க வீரராகக் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினால், ரஹானே மீண்டும் நான்காவது வீரராக வருவாரா? முரளி விஜய் தொடக்கம் தருவது தற்காலிகமா? அல்லது அடுத்த உலகக் கோப்பைக்கான அணியிலும் அவர் இடம்பெற்று தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எது எப்படி இருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவன் மீண்டும், மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறார்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை அலெஸ்டர் குக் தடுமாறினாலும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பாகவே ஆடி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காதது இங்கிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வெற்றியைப் பதிவு செய்ய இங்கிலாந்தும், தொடரை வெல்ல இந்தியாவும் தீவிர முனைப்பில் களமிறங்கும் என்பதால், இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.

டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய பணித்தது.சற்று முன் வரை இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top