வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் பட்டயலில் விஜய் மல்லையா பெயர் சேர்ப்பு: யுனைடெட் வங்கி அறிவிப்பு!

vijay_mallyaகிங்பிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் என பொதுத்துறை வங்கியான யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 4022 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை 350 கோடியாகும். அதுமட்டுமின்றி புதிய விமானங்களைப் பெறுவதற்கான முன்தொகையாகவும் இந்த வங்கி 60 கோடி அளித்துள்ளது. இந்த வாராக் கடன்களைத் திரும்பப்பெறும் முயற்சியாக வங்கிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்களிடம் இந்தக் கடன் தொகைக்கு இணையாக வைக்கப்பட்ட யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், மங்களூர் கெமிகல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், மல்லையாவின் கோவா வில்லா, மும்பையில் இருந்த கிங்பிஷர் ஹவுஸ் மற்றும் அதன் பிராண்ட் என்று மொத்தம் 4000 கோடி மதிப்பிடப்பட்ட பங்குகளில் ஒரு பகுதியை விற்க முடிவு செய்தன.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில், சில மாதங்களுக்கு முன்னரே கொல்கத்தாவைச் சேர்ந்த யுனைடெட் வங்கி கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவையும், அந்நிறுவனத்தின் மற்ற மூன்று இயக்குனர்களையும் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்கள் என்று அறிவிக்கும் முயற்சியில் இறங்கியது.

இதனைத்தொடர்ந்த கொல்கத்தாவின் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரணை வங்கிக்கு இதற்கான உரிமையை அளித்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து வங்கியின் குறைதீர்ப்பு கமிட்டி, மல்லையா உள்ளிட்ட கிங்பிஷர் நிறுவன இயக்குனர்களை இன்று தங்கள்முன் இன்று ஆஜராகும்படி கூறியிருந்தபோதிலும் ஒருவரும் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதால் தங்களால் ஆஜராக முடியாது என்றும் கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கிங்பிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவையும், மற்ற மூன்று இயக்குனர்களான ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ் குப்தே ஆகியோரை வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்களாக யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் போன்றவற்றிடம் தெரிவிக்கப்படும் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் தீபக் நரங் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top