40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

fishermen40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 63 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்த பின்னரும் இலங்கை சிறையில் இருந்த படகுகளும், மீனவர்களும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

கடந்த மாதம் 2ஆம் தேதி கச்சதீவு செல்லும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அன்றைய தினம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிததார். இதனால் கச்சதீவு செல்லும் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே இலங்கை சிறையில் இருந்த மீனவர்களை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக ராஜபக்சே அறிவித்தார். இதன்படி மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதனால் மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாததால், பலர் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்றனர்.

கடந்த 29ஆம் தேதி இருநாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக டெல்லியில் இந்திய-இலங்கை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான அறிக்கை வெளியாகும் என மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், வறுமையில் வாடும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்தனர். இதன் படி 40 நாட்களுக்கு பின் இன்று (1ஆம் தேதி) காலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற மீனவ தொழிலாளிகள் பலர் இன்னும் ஊர் திரும்பவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே இன்று மீன்பிடிக்க சென்றுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top