இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

192435இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குக், அலெக்ஸ் ஹாலஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

ஹாலஸ் 55 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் குக் 65 பந்துகளில் 44 ரன்களும் எடுத்த நிலையில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிந்ததால் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரி அடிக்கவே நீண்ட நேரம் பிடித்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி சின்னா பின்னமானது இங்கிலாந்து அணி. இயன் பெல் (28), பட்லர் (42), டிரட்வெல் (30) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 228 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், தவானும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனினும் 8வது ஓவரில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது தவான் அவுட்டானார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். நீண்ட காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கோலி இன்றைய ஆட்டத்தில் சோபிக்க ஆரம்பித்தார். கோலியும் ரகானேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்நிலையில் அரை சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே 45 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து அம்பாட்டி ராயுடு கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த போது 40 ரன்களை எடுத்திருந்த கோலி அவுட்டானார். அதன் பின்னர் அதிரடி ஆட்டக்காரர் ரெய்னா களமிறங்கினார். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரெய்னா இந்த ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடிய ராயுடு அரை சதம் அடித்தார். இந்நிலையில் 42 ரன்களை எடுத்திருந்த ரெய்னா அவுட்டானார். பின்னர் ஜடேஜா களமிறங்கினார். ராயுடுவும் ஜடேஜாவும் வெற்றிக்கு தேவையான 228 ரன்களை 43வது ஓவரிலேயே குவித்து அணிக்கு 2வது வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் ராயுடு 64 ரன்களுடனும், ஜடேஜா 12 ரன்களுடனும் களத்திலிருந்தனர். ஆட்டநாயகனாக இந்திய அணியின் சுழந்பந்துவீச்சாளர் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top