கைப்பற்றப்பட்ட படகுகள் விரைவில் ஒப்படைக்கப்பட வேண்டும்: விடுதலையான மீனவர்கள் பேட்டி

fishermenஇலங்கை சிறைகளில் இருந்த 94 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களில் ஜெகதாப்பட்டினம், நாகப்பட்டினம், தொண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 74 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதி 20 பேரும் ராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நேற்று மாலை மண்டபம் அழைத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மண்டபம் வந்த மீனவர்கள் விவரம் வருமாறு:–

ரூசல்டு, பெற்றோரியான், அருள்தாஸ், நம்பு பிச்சை, நாராயணன், ரீகன், மணி, அலங்காரம், கோவிந்தன், பாலசுந்தரம், மணிகண்டன், ராஜேந்திரன் உள்பட 20 பேர்.

இவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு உளவுத்துறை போலீசாரின் விசாரணைக்கு பின்னர் மீன்துறை அதிகாரிகள் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலையாகி வந்த மீனவர் ராஜேந்திரன், அருள்தாஸ் உள்ளிட்டோர் கூறியதாவது:–

கடந்த ஜூலை 21–ந் தேதியன்று மீன்பிடிக்க சென்ற எங்களை இந்திய கடல் எல்லையில் வைத்து தான் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

எங்களை 15ந்தேதி (நேற்று முன்தினம்) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, “மீனவர்கள் மட்டும் விடுதலை; படகுகளை விடுவிப்பது தொடர்பான விசாரணை செப்டம்பர் 5–ந் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள மீன்துறை அதிகாரிகள் எங்களிடம், “எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததோடு மட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்கள். அதனால் தான் உங்களை தொடர்ந்து கைது செய்து வருகிறோம்.

இந்தியாவில் உள்ள இலங்கை மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்து எங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் வரையிலும் இலங்கையில் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுதலை செய்யமாட்டோம்” என்று தெரிவித்தார்கள்.

தலைமன்னார் கடற்படை தளத்தில் தமிழகத்தை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சில படகுகள் முழுமையாக உடைந்து கரை ஒதுங்கிக் கிடக்கின்றன. மற்ற படகுகளும் இப்படி சேதம் அடையுமுன், மத்திய அரசு அந்த படகுகளை விடுதலை செய்து தமிழகம் கொண்டு வருவதற்காக நடவடிக்கையில் தாமதம் இல்லாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top