“புலிப்பார்வை” திரைப்படத்தை எதிர்த்த மாணவர்கள் மீது கொடுந்தாக்குதலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

பண்ருட்டி தி.வேல்முருகன்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் தமிழக மாணவர்கள். அவர்களை தன்னெழுச்சியாக கொந்தளிக்க வைத்தது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள்..

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமை காலத்தில் பள்ளி மாணவனாக மட்டுமே இருந்த பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் உயிருடன் கைது செய்து தனது இனவெறியை துப்பாக்கி தோட்டாக்களால் தீர்த்துக் கொண்டது. இதனை நிரூபிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலகை அலற வைத்தன.

தமிழக மாணவர்கள் மட்டுமின்றி சர்வதேச தலைவர்கள், மனித உரிமைப் பேரார்வலர்கள் அனைவருமே கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.. ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதற்கு பாலகன் பாலச்சந்திரன் புகைப்படமே சாட்சியமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்ல உலகையே உற்றுநோக்க வைத்தது தமிழக மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம். அது முதல் தமிழின உரிமைப் போர்க்களத்தில் தமிழக மாணவர் அமைப்புகள் தவிர்க்க முடியாத சக்தியாக அங்கம் வகித்தும் பல போர்க்களங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாலகன் பாலச்சந்திரனை ‘சிறார் போராளியாக’ சித்தரித்து,

வெற்றுடம்பில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் தமிழர் மனங்களில் ஆழப்பதிந்த பாலச்சந்திரன் புகைப்படத்தை அழித்து

அதற்கு மாற்றாக புலிச் சீருடையும் துப்பாக்கியுமான பாலச்சந்திரனின் உருவத்தை திணிக்கும் வகையில் உருவானதுதான் புலிப் பார்வை திரைப்படம்.

இது தமிழினத்தின் உளவியல் மீது சிங்களப் பேரினவாதம் நிகழ்த்துகிற புதுவகை போர்.

இதைப் புரிந்து கொண்டுதான் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக மாணவர் அமைப்புகள் ஏற்கெனவே குரல் கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் தலைவர்கள் அமர்ந்திருக்க அவர்கள் கண்முன்னேயே புலிப்பார்வையை எதிர்த்த மாணவ உறவுகள் கொடூரமாக தாக்கப்பட்டு மண்டைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழினத்தின் வாழ்வுரிமைக்காக போராடும் மாணவ உறவுகள் மீதான இந்த கொடூர தாக்குதல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்க மறுத்து அவர்களை கொச்சைப்படுத்தி குண்டர்கள் கொண்டு தாக்குதல் நடத்துவது கடுமையான கண்டத்துக்குரியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top