டாஸ்மாக்கில் மதுபானம் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை அதிகரிப்பு!

wine_shop_chennai_tasmacஆயத்தீர்வை உயர்வு எதிரொலியால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை அதிகரிக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 6 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை விரைவில் உயர இருக்கிறது.

தமிழகத்தில், 29.11.2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007ஆம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம் குவாட்டர் (180 மி.லி.) பாட்டில்கள் அடங்கிய பெட்டி (48 பாட்டில்கள்) ரூ.1796.44க்கு வாங்கப்படுகிறது. ஒரு பாட்டிலின் அடக்க விலை ரூ.37.42 ஆகும். டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனி ஆயத்தீர்வை உயர்த்தப்படுவதால், 48 பாட்டில்கள் அடங்கிய பெட்டி (சாதாரண ரகம்) ரூ.2606.44 ஆகவும், ஒரு பாட்டில் அடக்கவிலை ரூ.54.34 ஆகவும் இருக்கும். இதனால், குவாட்டர் பாட்டில் (சாதாரண ரகம்) விலை ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆக அதிகரிக்கும். இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140ல் இருந்து ரூ.150 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.280ல் இருந்து ரூ.300 ஆகவும் உயரும்.

மேலும், நடுத்தர ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.160-ல் இருந்து ரூ.185 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.320ல் இருந்து ரூ.365 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இதேபோல், உயர்ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.90ல் இருந்து ரூ.105 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.180ல் இருந்து ரூ.210 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.360ல் இருந்து ரூ.420 ஆகவும் விலை உயர உள்ளது.

அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top