இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு அழிவை விளைவிக்கிறது : வைகோ குற்றச்சாட்டு

வைகோஅணு உலை விவகாரத்தில் தென்தமிழ்நாட்டுக்கு அழிவை விளைவிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற லட்சோப லட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும் பாதுகாக்க வேண்டுமெனில் அணுஉலை இயங்கக்கூடாது. உலகில் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக அணுஉலைகள் அமைக்கப்படவில்லை. 2011ல் ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்து மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.

இடிந்தகரை அறப்போர்க்களத்தில் 900 நாட்களுக்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை அணு உலைக்கு எதிராக நடத்தியதை மிரட்டுவதற்காக 360க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள், இரண்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் மக்கள் மீது போடப்பட்டன. அம்மக்கள், குறிப்பாக மீனவ தாய்மார்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளானார்கள்.

அணு உலை இயங்குகிறது என்றும், அதிக மின்சாரம் கிடைக்கிறது என்றும் பொதுமக்களை ஏமாற்றுகின்ற வேலையில் மத்திய அரசும், அணு உலை நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன.

காயப்பட்ட புண்ணில் சூட்டுக்கோலை திணிப்பதைப்போல் கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுஉலைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கும் வஞ்சகமும், துரோகமும் இழைத்து வரும் மத்திய அரசு தென்தமிழ்நாட்டுக்கு பெரும் அழிவை விளைவிக்கும் விதத்தில் இப்பிரச்னையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுஉலைகள் அமைக்கக்கூடாது என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்று, இரண்டு அணு உலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போரை மக்கள் மேற்கொண்டுள்ளனர். இது நீதிக்கான போராட்டம். சாதி, மதம், கட்சி எல்லை கடந்து தமிழ்நாட்டின் தென்கோடி முனை மக்களைக் காக்க கடற்கரை மீனவ மக்கள் தொடுத்து இருக்கின்ற சத்திய யுத்தமாகும்.

இந்தப்போராட்டத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.க. முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு, இந்தப் பிரச்னையில் பாசிச அணுகுமுறை மேற்கொள்ளும் மத்திய, மாநில அரசுகளுக்கு பலத்த கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top