நாமக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெயில்பின்பனிக் காலம் தொடங்கியுள்ளதால், கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடுகையில்,

நாமக்கல் மாவட்ட வானிலையில் அடுத்த 4 நாள்களுக்கு (பிப்.1 முதல் 4-ஆம் தேதி வரை) வானம் லேசான மேகமூட்டத்துடன் சில இடங்களில் மழையின்றி காணப்படும். காற்றின் திசைவேகம் மணிக்கு 3 கிமீ வேகத்தில் தென்கிழக்கு, தெற்கிலிருந்து வீசக் கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 66.2 டிகிரி பாரன்ஹீட் முதல் அதிகபட்சம் 91.4 டிகிரி பாரன்ஹீட் வரையும், காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 40 சதம் முதல் அதிகபட்சம் 83 சதம் வரை இருக்கும்.

தற்போதைய வானிலை அடிப்படையில் பின்பனிக்காலம் தொடங்கியுள்ளதால், கோடை வெப்பம் அதிகரிக்கக் கூடும். இந்த வெப்பத்தை பண்ணைக் கோழிகள் திறம்பட எதிர்கொள்ள அவற்றின் உடல் எடை சீராக இருப்பது அவசியமாகும். சீரான எடையற்ற கோழிகள் கோடை வெப்பம் உயர உயர முட்டையின் எண்ணிக்கையும், எடையும் விரைவில் குறைவது மட்டுமின்றி வெப்ப அதிர்ச்சியில் இறக்க நேரிடும். எனவே, கோடைக்கான புல்லட் கோழிகளின் எடை கவனிக்கப்பட வேண்டும்.

கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோழிகள் பெரும்பாலும் ஈகோலை, மேல்மூச்சுக்குழல் நோய்களால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் குடிநீரில் நோய்க்கிருமிகள் உள்ளதா என பரிசோதித்து, அதற்கேற்ப கிருமிநாசினியைக் கலக்கவும், கோழிக் கொட்டகை சுகாதாரத்துக்கு வாரம் ஒருமுறை கிருமி நாசினியைத் தெüõத்து நோய்க்கிருமிகள் இல்லாதவாறு வைத்திருக்கவும் வேண்டும்.

கரும்பு, மரவள்ளி போன்ற நீண்டகாலப் பயிர்களில் குறைந்த வயதுடைய பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு ரகங்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறவும், களைகள் பாதிப்பைக் குறைக்கவும் முடியும். உளுந்து – கோ 6, வம்பன் -5,6,7 ரகங்களையும், பாசிப்பயரில் கோ – 7, 8, வம்பன் 2, 3 ரகங்களையும் தேர்வு செய்யலாம்.

மரவள்ளியில் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுவதால், இதைக் கட்டுப்படுத்த டிரை அசோஃபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற வீதத்தில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இந்த வெள்ளை ஈக்கள் இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி இலைகளின் வளர்ச்சியைக் குறைத்து மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top