ஈழத் தமிழர்களை அரசியல் அநாதையாக்க இலங்கை அரசு முயற்சி: இரா.சம்பந்தன்

இரா.சம்பந்தன்தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று இலங்கை அரசு கங்கணம் கட்டி செயல்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பாகவும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டுமென்பதில் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை.

தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாடு புரட்டாசி மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேராளர்கள் ஒன்றுகூடுவார்கள். இவர்கள் ஒன்றுகூடி ஏகமனதாக தீர்மானங்களை மேற்கொள்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில் நான் தமிழரசுக்கட்சியின் தலைவராகக் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். அந்தவகையில் எனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகின்றேன். அது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பேராளர்கள் ஒன்றுகூடி இணக்கமான முடிவுக்கு வருவார்கள். இதன் மூலம் ஒருபோதும் பிளவுபடவோ, பிரச்னைகள் எழவோ இடமில்லை.

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமிழர்களின் முன்னேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அந்தவகையில் கூட்டமைப்பை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்ற ஒன்றாகவே அமையும்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அது தொடர்பாக சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.

எப்படியாவது கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று அரசாங்கம் கங்கணம் கட்டி செயற்படுவதையே காண முடிகின்றது. அதற்கு கட்சியோ தமிழ் மக்களோ ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top