காமன்வெல்த் விளையாட்டு: ஸ்குவாஷ், ஆக்கியிலும் இந்தியா இன்று களம் இறங்குகிறது

Punj Lloyd WISPA Masters Tournament20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது நாளான இன்று மொத்தம் 20 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதில் 215 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் குழுவை அனுப்பிய இந்தியாவும் சில பந்தயங்களில் களம் இறங்குகிறது.

இதில் பளுதூக்குதலில் இந்தியா பதக்க கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கம் வென்றிருந்தது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலத்தை தட்டிச் சென்றிருந்தது. ஆனால் இந்த முறை நைஜீரியா காமன்வெல்த் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகவில்லை. போதிய நிதி ஒதுக்கப்படாததால் அந்த நாட்டு வீரர்-வீராங்கனைகள் வெளிநாட்டு பயிற்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

இது மற்ற அணி வீரர், வீராங்கனைகளுக்கு சற்று சாதகமான அம்சமாக தெரிகிறது. இந்திய வீராங்கனைகள் சஞ்சிதா, சாய்கோம் மீராபாய் சானு ஆகியோர் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் (இரவு 8 மணிக்கு தொடக்கம்) கலந்து கொள்கிறார்கள்.

2010-ம் ஆண்டு இந்த பிரிவில் இந்தியா வெள்ளியும், வெண்கலமும் தனதாக்கியது. எனவே இந்த முறையும் பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதே போல் ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் இந்திய வீரர்கள் சுகென் டேவ், கணேஷ் மாலி ஆகியோர் இன்று தங்களது பலத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான ஆக்கி போட்டியில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியாவுடன், கனடா, நியூசிலாந்து, டினிரிடாட் அண்டு டொபாக்கோ, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

இதில் ரிதுராணி தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கனடாவை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. ‘சமீபத்தில் மலேசிய போட்டிகளில் நாங்கள் வெற்றிகளை குவித்தோம். அது இந்த தொடருக்கு உதவிகரமாக இருக்கும்.

காமன்வெல்த் போட்டியை வெற்றியுடன் தொடங்கு வோம் என்று நம்புகிறேன்’ என்று இந்திய கேப்டன் ரிதுராணி குறிப்பிட்டார். காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் முதல் பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் சவுரவ் கோஷல், தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்ட 6 பேர் கொண்ட இந்திய அணியினர் ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் ஒற்றையர் பிரிவில் சவாலை தொடங்குகிறார்கள். சவுரவ் கோஷல் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஜூலஸ் ஸ்னாக்கை (செயின்ட் வின்சென்ட்) சந்திக்கிறார். ‘பை’ வாய்ப்பு மூலம் நேரடியாக 2-வது சுற்றில் இன்றிரவு விளையாட உள்ள தீபிகா பலிக்கல் அதில் சார்லோட் கினாக்ஸ் (டிரினிடாட்)- நதுனி (இலங்கை) ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top