மோனோ ரயில் திட்டத்துக்கு ஜெயலலிதா விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்: அமைச்சர் தகவல்

91112799_1142b4f62cசட்டசபையில் இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:–

பாஸ்கர் (தே.மு.தி.க.):– அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏ.சி. வால்வோ பஸ் இயக்கப்படும் என்று அறிவித்தீர்களே? அது எந்த நிலையில் இருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி:– நீண்ட தூரத்துக்கு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் 477 புதிய பஸ்களை முதல்–அமைச்சர் வழங்கியுள்ளார். மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு ஏ.சி வால்வோ பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டதில் முதலில் மதுரை, கோவையில் இருந்து இந்த பஸ்கள் விடப்படும். விரைவில் முதல்–அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பாஸ்கர் (தே.மு.தி.க.):– மோனோ ரயில் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது எந்த நிலையில் உள்ளது?

அமைச்சர் செந்தில் பாலாஜி:– மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இது இறுதி செய்யப்படும். மோனோ ரயில் திட்டத்துக்கு முதல்–அமைச்சர் அம்மா விரைவில் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து இருந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை மோனோ ரயில் திட்டத்தை பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் 43.48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 திட்டங்களாக மறுசீரமைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி திட்டம் 1–ல் பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரையில் மற்றும் இணைப்பாக போரூர் முதல் வடபழனி வரை 20.68 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும். திட்டம் 2–ல் வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கிலோ மீட்டர் தூரத்துக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை நகரில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top