உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: ஜெர்மனி-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்துஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜெண்டினாவும், ஜெர்மனியும் மோதவுள்ளன. ரியோ டீ ஜெனீரோவில் உள்ள பிரசித்தி பெற்ற மரகானா மைதானத்தில் திங்கள்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியும், தென் அமெரிக்க கண்டத்தில் ஜொலிக்கும் ஆர்ஜெண்டினாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒரு மாதமாக நடைபெற்று வரும் ஃபிஃபா 20-வது உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரேசிலில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில், தென் அமெரிக்கா கண்டத்தில் உலகக் கோப்பை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஜெர்மனி பெறும்.

குரூப் சுற்றில் கானாவுடனான ஆட்டத்தை 2-2 என டிரா செய்த ஜெர்மனி, ரவுண்ட் -16 சுற்றில் அல்ஜீரியாவையும், காலிறுதியில் பலம் வாய்ந்த பிரான்ûஸயும் போராடி வீழ்த்தியது.

அரையிறுதில் பிரேசிலை அதன் சொந்த மண்ணில் 7-1 என தோற்கடித்ததற்குப் பின் ஜெர்மனியின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

முல்லர், க்ளோஸ் வாய்ப்புகளை வீணடிக்காமல் முன்களத்தில் அசத்துகின்றனர் என்றால் மேட்ஸ் ஹம்மல், கேப்டன் பிலிப் லாம் பின்களத்தைப் பார்த்துக் கொள்கின்றனர். ஷ்வைன்ஸ்டீகர், சமி கெடிரா, டோனி க்ரூஸ், மெசட் ஒசில் ஆகியோர் நடுகளத்தில் புகுந்து விளையாடுகின்றனர் எனில், கோல் கீப்பர் மேனுவல் நோயர் கோல் கீப்பிங் பணியுடன் சில சமயம் பின்கள வீரர்களின் வேலையையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறார்.

ஜெர்மனி அணி இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளன. இது ஆர்ஜெண்டினாவின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம். ஜெர்மனிக்கு முன்களம் மட்டுமல்லாது, பின்களம் மற்றும் நடுகளம் என மூன்று விதமான எட்டு வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.

வெற்றிக்கு தனிப்பட்ட நபர் ஒருவரின் செயல்பாட்டை மட்டுமே எதிர்பார்த்திருக்கவில்லை, அந்தந்த இடத்தில் வீரர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர் என்பதாலேயே ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கவனிக்கப்படுகிறது.

ஆனால், ஆர்ஜெண்டினாவுக்கு அப்படி இல்லை. இன்னும் அந்த அணி மெஸ்ஸியை பெரிதும் சார்ந்திருக்கிறது. 1986-இல் மாரடோனா தனி ஆளாக ஆர்ஜெண்டினாவுக்கு உலகக் கோப்பை வென்று தந்ததைப் போல, மெஸ்ஸி ஏதாவது மாயம் செய்து தங்களுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தருவார் என நம்புகின்றனர் ஆர்ஜெண்டின ரசிகர்கள். அதனால்தான் அலை அலையாக பிரேசிலுக்கு வாகனங்களில் படையெடுத்துச் செல்கின்றனர் ஆர்ஜெண்டினா ரசிகர்கள்.

அரையிறுதியில் நெதர்லாந்து வீரர்கள் பின்களத்தில் வரிசை கட்டி நின்றதன் விளைவு மெஸ்ஸியால் ஒருமுறை கூட பந்துடன் பெனால்டி ஏரியாவுக்குள் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. அதேபோல ஜெர்மனி வீரர்களும் கட்டம் கட்டும் பட்சத்தில் கோல் அடிக்க மெஸ்ஸி ரொம்பவே திணற வேண்டி இருக்கும்.

ஏஞ்சல் டி மரியோ காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்ப இருப்பது ஆர்ஜெண்டினாவுக்கு பலம். அதோடு நெதர்லாந்தின் ராபெனை கோல் எல்லையில் நெருங்க விடாமல் தடுத்த டிஃபண்டர் ஜேவியர் மாஷெரனோ பின்களத்தில் ஆதிக்கம் செலுத்தலாம். ஷூட் அவுட்டின்போது இரண்டு கோல்களைத் தடுத்த கோல் கீப்பர் செர்ஜியோ ரோமிரோ தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் ஜெர்மனிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கலாம்.

பலம் என்று பார்த்தால் ஜெர்மனியும், அதிர்ஷ்டம் என்று பார்த்தால் ஆர்ஜெண்டினாவும் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆர்ஜெண்டினா கோப்பை வெல்லும் பட்சத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் வேறு எந்த அணியும் உலகக் கோப்பை வென்றதில்லை என்ற சாதனை தொடரும்.

 

இதற்கு முன்…

இதற்கு முன் இரு அணிகளும் 1986 மற்றும் 1990 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மோதியுள்ளன. 1986-இல் மரடோனாவின் ஆர்ஜெண்டினா அணி மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி பட்டம் வென்றது. 1990-இல் ஜெர்மனி அணி ஆர்ஜெண்டினாவை வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டது.

பிரேசில் ரசிகர்கள் ஜெர்மனிக்கு ஆதரவு: அரையிறுதியில் பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோற்கடித்தது. இதை பிரேசில் ரசிகர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். இருப்பினும் நெய்மர், தியாகோ சில்வா இல்லாமல் ஆடிய பிரேசிலை வீழ்த்தியதை ஜெர்மனி வீரர்கள் பெரிதாகக் கொண்டாடவில்லை. ஜெர்மனியின் இந்த அணுகுமுறை பிரேசிலியர்களைக் கவர்ந்துள்ளது.

எனவேதான், தங்களைத் தோற்கடித்தவர்கள் இறுதிச் சுற்றில் மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதை ஓரங்கட்டி, ஜெர்மனிக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப தயாராகி விட்டனர் பிரேசில் ரசிகர்கள்.

பிரேசிலியர்கள் ஜெர்மனியை ஆதரிப்பதற்கு இன்னுமொரு காரணம் உண்டு. கிரிக்கெட் அரங்கில் இந்தியா – பாகிஸ்தான் போல கால்பந்து உலகில் பிரேசில் – ஆர்ஜெண்டினா ஜென்ம விரோதிகள் போல பாவிக்கப்படுகின்றன. எனவே மரகானா மைதானத்தில் ஜெர்மனியின் ஆதரவுக் குரல்தான் ஓங்கி ஒலிக்கும்.

* இந்த உலகக் கோப்பையில் 2 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 62 ஆட்டங்களின் மூலம் 167 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 1998-இல் 171 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தன.

 

கடந்து வந்த பாதை

குரூப் சுற்று

 

ஜெர்மனி

1 போர்ச்சுகல் (4-0)

2 கானா (2-2)

3 அமெரிக்கா (1-0)

 

ஆர்ஜெண்டினா

போஸ்னியா (2-1)

ஈரான் (1-0)

நைஜீரியா (3-2)

 

காலிறுதிக்கு முந்தைய சுற்று

அல்ஜீரியா (2-1)

ஸ்விட்சர்லாந்து (1-0)

 

காலிறுதி

பிரான்ஸ் (1-0)

பெல்ஜியம் (1-0)

 

அரையிறுதி

பிரேசில் (7-1)

நெதர்லாந்து (4-2)


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top