கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

M_Id_427144_chandrababu_Naiduபுதிய ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் மந்திரிகளுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் மந்திரிசபையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.

காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6.45 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு பின்னர் நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:–

நான் பதவி ஏற்கும்போது கையெழுத்திட்ட கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் கடன், குடிநீர் திட்டம், புதிய தலைநகர் உள்ளிட்ட 8 அம்ச திட்டம் குறித்து விவாதித்தேன். கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தற்போது நகரங்களில் நடைமுறையில் உள்ள 4 ரூபாய்க்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதனை அமுல்படுத்த தனி கமிட்டி அமைக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்காக 2 சதவீதம் செலவு செய்ய வேண்டும். குடிநீர் பிளாண்டுகளை கார்ப்பரேட் நிறுவனமே செயல்படுத்தும் வகையில் ஒப்படைக்கப்படும். குடிநீர் பிளாண்டை ஏற்கும் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்.

மாநிலத்தில் ரூ.15,900 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. இதனை நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகியவை மெகா சிட்டியாக மாற்றப்படும். 14 நகர சபைகள் ஸ்மார்ட் சிட்டியாக (நவீனமாக) மாற்றப்படும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தலைநகர் உருவாக்க 20 ஆண்டுகள் ஆகும். இதற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் கோடி தேவைப்படும். எனவே இரவோடு இரவாக புதிய தலைநகரை உருவாக்க முடியாது. அரசு ஊழியர்களின் பணிக்கால வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்படும். தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top