பொள்ளாச்சி: விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்

464e1061-5f88-4891-90ca-291470b5c203_S_secvpfபொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே தேவாலயம் உள்ளது. இதன் பின்புறம் ஆலயத்துக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியுள்ளனர்.

ஆதரவற்ற இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். வழக்கம் போல் நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் விடுதியில் இருந்து நள்ளிரவில் சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன வார்டன் மாணவ–மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கிருந்த 5–ம் வகுப்பு மாணவியையும், 6–ம் வகுப்பு மாணவியையும் காணவில்லை.

இதுகுறித்து அவர் விடுதியின் காவலாளியிடம் விசாரித்தபோது அவர் ‘யாரும் வெளியே செல்லவில்லை, அனைவரும் இங்குதான் இருக்கிறார்கள்’ என்றார்.

ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்த வார்டன் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அவர்கள் விரைந்து வந்து காவலாளியிடம் விசாரித்தனர். அவர் அப்போதும் ‘யாரும் வெளியே செல்லவில்லை, எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள்’ என்றார்.

அவரது தகவல் தெளிவானதாக இல்லாததால் விடுதியில் சோதனை நடத்தினர். பின்னர் விடுதி வளாகத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.

அருகே சென்று பார்த்தபோது மாணவிகள் 2 பேர் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் முணங்கிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தனர். ‘மாணவிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் ரத்தப்போக்கு அதிகமாக உள்ளது. மாணவிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை’ என்று டாக்டர்கள் கூறினார்கள். மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாணவிகளை ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார்கள். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. விடுதியில் தங்கியுள்ள மாணவ–மாணவிகளுக்கு இரவில் சரியாக சாப்பாடு வழங்கப்படாததும், அவர்கள் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது.

பஸ் நிலையத்தில் போதைப்பொருள் விற்கும் குரு என்பவர் மாணவிகளுக்கு தினமும் இரவு சாப்பாடு வாங்கி கொடுத்து இருக்கிறார். இதனால் மாணவிகள் இருவரும் அவரிடம் அன்பாக பழகியிருக்கிறார்கள். அதை தவறாக புரிந்து கொண்ட குரு நேற்று இரவு வேலை முடிந்ததும் சாப்பாட்டு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துக்கொண்டு மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றிருக்கிறார்.

மதில் சுவர் ஏறி உள்ளே குதித்த அவர்கள் மாணவிகள் இருவரையும் நைசாக அங்குள்ள பாழடைந்த கட்டித்துக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மாணவிகள் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்ததும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பி ஓடிய அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top