ஹாலிவுட் பார்வை ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ் (Twelve years a slave).

ஹாலிவுட்இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கருப்பு இனத்தவர்கள் அமெரிக்காவில் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாயினர்.உண்ணவும் உறங்கவும் கூட சரியான நேரம் அளிக்காமல் பண்ணை முதலாளிகள் அவர்களை கீழ்த் தரமாக நடத்திவந்தனர்.

பிற்காலகட்டதில் ஆபிரகாம் லிங்கன் போன்ற பலரின் தொடர் முயற்சிகளால் கறுப்பின அடிமைகளின் வாழ்வில் புதிய விடியல் தோன்றியது. அம்மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நேர்ந்தது.அதுவரை அந்த அப்பாவி மக்கள் அடைந்த இன்னல்கள் பல.

12 வருடங்கள் அடிமை வாழ்கையை மேற்கொண்ட சாலமன் நார்தப் அடிமை வாழ்விலிருந்து மீண்டு பல்வேறு இன்னல்களுக்குப் பின்னர் எழுதிய தனது சுயசரிதை ‘ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்’ (Twelve years a slave).புத்தகமாக வெளிவந்த இது உலக மக்கள் பலரின் நெஞ்சையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்.ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தில் சாலமன் நார்தப் பாத்திரத்தில் சிவிட்டல் எஜோஃபோர் நடித்திருக்கிறார்.சாலமன் நார்தப்பின் தந்தை மின்டஸ் நார்தப், அமெரிக்க பண்ணை முதலாளியான கேப்டன் ஹென்றி நார்தப்பின் பண்ணையில் அடிமையாக வேலைபார்த்தவர். தனது எஜமானரின் குடும்பப் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு விசுவாசமிக்க அவருக்கு எப்படியோ சுதந்திர வாழ்வு கிடைக்கிறது. திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகிறார் மின்டஸ்.

மூத்தவனான சாலமன் ஒரு தொழில்முறை வயலின் கலைஞனாகிறார். வேலை இல்லாத மற்ற நேரங்களில் தச்சுத் தொழிலும் செய்துவருகிறார்.இந்நிலையில்
சர்க்கஸில் இசைக் கலைஞர் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிமுகமில்லாத சிலர் சொல்வதை நம்பி அவர்களுடன் நியூயார்க் செல்கிறான் சாலமன். ஆனால் ஒரு பருத்திப் பண்ணையில் அடிமையாக விற்கப்படுகிறான்.

12 வருட நரக வாழ்க்கையில் வெவ்வேறு முதலாளிகளிடம் சித்திரவதைக்கு உள்ளாகும் சாலமனின் துயரக் கதையை சிறந்த முறையில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்டீவ் மெக்குயின்.வருகிற பிப் 21ம் தேதி இந்தியாவில் திரைக்கு வரவுள்ள இத்திரைப் படத்தில் பிராட் பிட்,மைக்கேல் ஃபாஸ்பெண்டர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த வருட ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உட்பட மொத்தம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம்,இந்தியாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top