16 வது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இன்றி செயல்படும்!

parliament16 வது மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் அளவுக்கு எந்த ஒரு கட்சியும் 55 இடங்களில் வெற்றிபெறவில்லை என்பதால், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவி எந்த ஒரு கட்சிக்கும் வழங்கப்படமாட்டாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிக்கு காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற, குறிப்பிட்ட கட்சி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குறைந்தது 10 சதவீத இடங்களையாவது, அதாவது 55 இடங்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சிக்கும் அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளபோதிலும், அந்த கட்சிக்கு 44 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக 37 இடங்களையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் யாருக்கும் உரிய எண்ணிக்கை இல்லை என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யாருக்கும் அளிப்பதில்லை என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள், முன்னுதாரணங்களை கருத்தில்கொண்டு மத்திய அரசுடன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி 404 இடங்களை வென்று மாபெரும் மெஜாரிட்டியுடன் இருந்தது. அப்போதும் எந்த கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் 22 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்ந்தது. அப்போது பா.ஜனதா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top