ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு!

TDP_Chief_Chandrababu_Naiduஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்.

விஜயவாடா மற்றும் குண்டூர் இடையே உள்ள நாகார்ஜுனா நகரில் இரவு 7.27 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் அவருக்கு ஆளுநர் ஈ.எல். நரசிம்மன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் பதவி ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப் படவில்லை.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் குஜராத், ராஜஸ்தான்,சத்தீஸ்கர், ஒடிசா,பஞ்சாப் மற்றும் கோவா மாநில முதலமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழா ஆடம்பரமாக நடப்பதாக குற்றம் சுமத்தி இருப்பதுடன் விழாவில் பங்கேற்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் பயிர்கடன் ரத்து செய்யும் கோப்பில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விழாவின் போது மாநிலத்தின் தலைநகரை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகள் வரை தெலங்கானா மற்றும் சீமாந்திராவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் ஆந்திரா மற்றும் தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தெலங்கானா பிரிந்த பின்னர் ஆந்திராவின் முதல் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top