சொத்துக்குவிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு!

Jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி லெக்ஸ் ப்ராப்பர்டி நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், வழக்கில் இருந்து தங்களது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்களது மனுவை விசாரிக்கும் வரை பிரதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இரு வழக்குகளும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6ஆம் தேதி வரை (இன்று) இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் 16ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

அதோடு, வழக்கிற்கு தடை கேட்டுள்ள ஜெயலலிதா மனுவிற்கு வரும் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்கக் கோரிய தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனின் வழக்கில் ஜெயலலிதா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top