மெட்ரோ ரயில் சேவை அக்டோபரில் தொடங்கும் : கோயம்பேடு– ஆலந்தூர் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம்

metro trainகோயம்பேடு – ஆலந்தூர் இடையே வரும் அக்டோபர் மாதம் பயணிகள் சேவை தொடங்கவிருக்கும் நிலையில், கோயம்பேடு– ஆலந்தூர் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2–வது வழித்தடத்திலும் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது.

வரும் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த 2 வழித்தடங்களில், 21.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் பாதையிலும், 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் 11 ரயில் நிலையங்களும், சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை 6 ரயில் நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்பட்டு வருகிறது. 2–வது வழித்தடத்தில், சென்டிரல் முதல் அண்ணாநகர் டவர் வரை சுரங்கப்பாதையில் 8 ரயில் நிலையங்களும், அதன்பிறகு திருமங்கலத்திலிருந்து கோயம்பேடு வழியாக 8 ரயில் நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடத்திலும் 33 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்நிலையங்களில் உள்ள மொத்த 115 வாசல்களில் 84 வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் 16 ஆயிரம் மீட்டர் அதாவது 45 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ளப்பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

மெட்ரோ ரயில் சேவைக்கான ரயில்கள், பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. ரூ.1,471 கோடியில் 42 ரயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் வாங்க இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 9 ரயில்கள் பிரேசில் நாட்டிலும், 33 ரயில்கள் ஆந்திரா மாநிலம் தடா ஸ்ரீசிட்டியில் இருந்து தயாரித்து அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் 7 ரயில்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து 3 ரயில்கள் உட்பட 10 ரயில்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள 26 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.198.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டில் இருந்து வரவேண்டிய கடைசி 2 ரயில்களும் வரும் 7–ந்தேதி சென்னைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே வணிக ரீதியிலான பயணிகள் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2–வது வழித்தடத்தின் பறக்கும் வழித்தட பாதையில் உள்ள கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் ஆகிய 5 ரயில் நிலையங்கள் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை மெட்ரோ ரயில் பாதை பணி மற்றும் மின்சார இணைப்பு பணிகள் முடிவடைந்ததால் இந்த மார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

அசோக்நகர் முதல் ஆலந்தூர் வரை ரயில் தண்டவாளப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்பாதைகளில் மின்சார தூண்கள் மூலம் மின்இணைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்தப்பணி இம்மாத இறுதிக்குள் முடிவடைந்த உடன், இம்மாத இறுதியிலேயே கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உயர்த்தப்பட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top