தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் நாளை பதவி ஏற்பு

K-Chandrasekhar-Raoநாட்டின் 29-வது மாநிலமாக உதயமாகிற தெலுங்கானாவின் முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை (2-ந் தேதி) பதவி ஏற்கிறார்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் அரை நூற்றாண்டு கனவாக இருந்தது. 2001-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சந்திரசேகரராவ், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கினார். இந்தக் கோரிக்கையை முன்வைத்து எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு எடுத்தது. அதன்பின் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும், வலுவாகவும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இருப்பினும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதில் உறுதியாக இருந்தது. தெலுங்கானா தனி மாநில மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலும் வழங்கினார். இதையடுத்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா நாளை (2-ந் தேதி) உதயமாகிறது.

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் தெலுங்கானா, சீமாந்திரா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து நாளை உதயமாகிற தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் மதியம் 12.57 மணிக்கு பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடக்கிற விழாவில், அவருக்கு கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிய மாநிலத்தில் சிறுபான்மையை சேர்ந்த ஒரு தலைவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் மகமுது அலி என்ற எம்.எல்.சி.க்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

சந்திரசேகரராவின் ராசி எண் 6 என்பதால் அந்த எண் எந்தவொன்றிலும் வருமாறு பார்த்துக்கொள்வார். எனவே அவரது மந்திரிசபையில் அவரையும் சேர்த்து 6 அல்லது 15 மந்திரிகள் இடம் பெறக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

கொப்புல ஈஷ்வர், நரசிம்ம ரெட்டி, ஈட்டலா ராஜேந்தர், ஜூப்பள்ளி கிருஷ்ணராவ், கொண்ட சுரேகா ராஜையா, ஜெகதீஷ் ரெட்டி, சீனிவாச கவுடா அல்லது சுவாமி கவுடா, சீனிவாஸ் ரெட்டி, ராமராவ் ஹரிஷ்ராவ் உள்ளிட்டவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்களின் மின் உபயோகத்தின் அடிப்படையில் அவற்றுக்கு மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படும் என கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன் நேற்று அறிவித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநில உதயத்தையொட்டி, லோக் சத்தா கட்சி தேசிய தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணா, ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமையகத்தில் நாளை காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பிற தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top