தாய்லாந்தில் நாடாளுமன்ற மேலவையை கலைத்து ராணுவம் அதிரடி நடவடிக்கை!

Winthai-Suvaree-24052014eதாய்லாந்தின் நாடாளுமன்ற மேலவை கலைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ள ராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தேசிய அமைதி மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வின்தாய் சுவாரி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

நாடாளுமன்ற மேலவை (செனட்) கலைக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேசியப் பேரவை (கீழவை) அல்லது மேலவைக்கு பதிலாக இனி ராணுவ ஆட்சிக் குழுவே சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை வகிக்கும் என்று வின்தாய் சுவாரி கூறினார்.

150 உறுப்பினர்கள் கொண்ட மேலவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு எதுவுமே ராணுவ ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் அவரது அரசின் முக்கியத் தலைவர்கள் ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்னல் வின்தாய் சுவாரி கூறுகையில், “”தாய்லாந்து அரசியல் பிரச்னைகளில் அவர்களுக்கு உள்ள நேரடித் தொடர்பு அடிப்படையில் அவர்கள் ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தம்: இதனிடையே, “தாய்லாந்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ராணுவ உதவிகள் தாற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறினார்.

மேலும், “தாய்லாந்துக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகளில் தோராயமாக 35 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20.78 கோடி) உதவியை ஏற்கெனவே நிறுத்தி வைத்தோம். மேலும் தாற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டிய உதவித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்’ என்றார் மேரி ஹார்ஃப்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top