நிரபராதிகள் 7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் நிரபராதிகள் 7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும் தாமதமானால் 7.5 இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போல், 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 

ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் தற்போது வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறார். தேர்தல் வரும்போது தான் வன்னிய இன மக்கள் மீது ராமதாசுக்கு அக்கறை ஏற்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளித்து தேர்தலிலும் போட்டியிடுவோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது, மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதையே காட்டுகிறது, என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top