“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி” நினைவு நாள்; வ.உ.சி மறைவு குறித்து பெரியார் எழுதிய தலையங்கம்

தொகுத்தவர்; ரெங்கையா முருகன்

வ.உ.சிதம்பரனாருடைய அந்திம காலப் பதிவுகளினை பழைய தமிழ்ப் பத்திரிக்கைகளில் தேடினால் ஏதோ இரு வரிச் செய்திகளாகத்தான் பதிவுகளை காண முடிகிறது. வ.உ.சி.யின் இறப்புச் செய்திகள் அவர் சம்பந்தப்பட்ட முக்கிய தமிழ் இதழ் செந்தமிழ், மற்றும் தமிழ்ப்பொழில் இதழில் கூட காண முடியவில்லை என்கிற போது மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.

மகாத்மா காந்தி நடத்திய ஹரிஜன் இதழில் கூட வ.உ.சி. அவர்களுக்கு இரங்கல் குறிப்பு காணப்படவில்லை. இந்து, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் ஒரு செய்தியாகவே வந்திருக்கிறது. ஆனால் பெரியார், திரு.வி.கல்யாணசுந்தரனார், குடியரசு, நவசக்தி இதழ்களில்  வ.உ.சி. மறைந்த பிறகு தங்களுக்கான சிறப்பான பங்களிப்பினை பதிவு செய்திருந்தனர். ஆனந்த போதினி இதழில் கூட கோ.வடிவேல்செட்டியார் மற்றும் வ.உ.சிதம்பரனார் இருவரும் ஒரு வாரத்திற்குட்பட்டு காலமான காரணத்தால் இருவருக்கும் சேர்த்து இரங்கல் குறிப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த பின்னயில் தந்தை பெரியாருடைய குடியரசு இதழில் நவம்பர் 22, 1936 ல் “சிதம்பரம் சிதைவு” சிதம்பரம் பிள்ளை அய்யராயிருந்தால்” என்ற செய்தி கட்டுரையை அதற்கடுத்த வாரம் நவம்பர் 29, 1936 ல் குடியரசு இதழில் வெளியாகியது. ஆண்டு கொண்டிருந்த பிரிட்டீஷ் அரசாங்கம் நெருக்கடி காரணமாகவும் பெரியவர் வ.உ.சிதம்பரனார் குறித்த மறைவுச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. அவர் மறைந்த  பிறகும் அவரது பிறந்த நாளையும், நினைவுதினத்தையும் நினைக்கவில்லை. திரு. ம.பொ.சிவஞானம் 1939 ம் ஆண்டிற்குப் பிறகு தனி மனிதராக பல்வேறு வடிவங்களில் வ.உ.சி.யை பொதுமக்கள் புத்தியில் கொண்டு சேர்த்தார். எந்த வகையில் பார்த்தாலும் பெரியார் குடியரசில் எழுதிய இச் செய்தி இன்றைய பெரியார் இயக்கங்கள் வ.உ.சிதம்பரனார் மீது எந்த அளவுக்கு பெரியார் மதிப்பு வைத்துள்ளார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்பதிவினை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சி. மறைவின் போது தனது குடியரசு இதழில் பெரியார் அவர்களால் மூன்று வாரம் தொடர்ந்து எழுதிய தலையங்கங்கள்.

நவம்பர் 22, 1936

ஈரோட்டில் பெரியார் அவர்களின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு உண்மை விளக்கம் பிரஸில் அச்சிடப்பட்டு 24 பக்கங்களில் ஒரு அணா விலையில் வெளிவந்த குடிஅரசு இதழில் 1936 நவம்பர் 22 இல் வ.உ.சி.யின் மறைவு குறித்து வெளியான செய்தி இதோ:

“தோழர் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்திவிட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரி யென்று தோன்றிய வழிகளில் உழைத்து விட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.

மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின்தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்பந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வதுபோல் அரசன் எப்படிப்பட்ட வனாய் இருந்தாலும் ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாகவும் கருதி வாழவேண்டும் என்று இந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும் மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து, துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும் அவராலேயே அனேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப் படம் இருக்கும் படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை; அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப் பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்ப தற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேசபக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

ஆகையால், சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரணமாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக, (22.11.1936குடிஅரசு)

நவம்பர் 29, 1936, குடியரசு இதழில் பெரியார் பெரியவர் வ.உ.சி. குறித்து எழுதியது.

ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி,தினமணி இடம் கொள்ளுமா?

பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே?

ஏ _ பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டுகட்கு முன்பு சிறைபுகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்ட நஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து, சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆம் வயதில் உயிர் துறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும் மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இதுவரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேக்களாயிருந்தாலும் சரி _ தென்னாட்டுப் படேக்களாயிருந்தாலும் சரி _ சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா? ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாக முன்பு உறை போடவும் கூடுமா?

ரௌலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர்.சி.வி. குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லாதாரிடமே பத்துலட்சக் கணக்கில் கொள்ளையடித்து  எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று வில் எழுதிவைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 1000இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்கவில்லையென்றால்  இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே? போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்!

சி.ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசைவிட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரகாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப்பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலைமேல் கல்விழப்போகிறதே என்று வேண்டுமானால், கவலைப்பட்டி ருக்கலாம்.

தாலி அறுப்பு  ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது, ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது ,போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ், காங்கிரஸ்  என்று உயிர் விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

சிதம்பரம்பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப்பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா?  (29.11.1936 குடிஅரசு)

தொகுத்தவர்; ரெங்கையா முருகன்


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. குருசாமி மயில்வாகனன்

    இனியாகிலும் பெரியவருக்கு கொடுக்கவேண்டிய இடம் எது என்பதைப் பகுத்தறிவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Your email address will not be published.

Scroll To Top