வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி; 12 செ.மீ. மழை கொட்டியது!

வட கிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. பெரும் கனமழையால் தூத்துக்குடி நகரம் மற்றும் கோவில்பட்டியின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தலைநகர் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு 8 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டியது. 

தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

தூத்துக்குடி நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 122.2 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. தொடர்ந்து மழை பொழிந்துவருவதால் தாழ்வான இடத்தில் கட்டப்பட்ட அரசு ஊழியர் குடியிருப்பு, பேருந்து நிலையம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல புகுந்தது.

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் 62 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் சுமார் ஒரு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி, குடியிருப்பின் மாடியில் தங்கினர். வீடுகளில் இருந்த பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதேபோன்று கால்டுவெல் காலனி 1-வது தெருவில் உள்ள சுமார் 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தையும் மழைநீர் சூழ்ந்தது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் குளம் போன்று தண்ணீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்திலும் குளம்போன்று மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் எம்.சவேரியார்புரம் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முத்தையாபுரம் ஜே.எஸ்.நகர் பகுதியில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. முத்தையாபுரம் சூசை நகர் காலனியில் விடிய, விடிய பெய்த மழையில், 40 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

தூத்துக்குடியில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. உப்பாற்று ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம் அணையில் இருந்து ஏற்கனவே பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதில் வடகால், தென்காலில் தலா 300 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. தற்போது மழைநீரும் சேர்ந்து வருவதால், தாமிரபரணி பாசன குளங்களில் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்டு, நீதிபதிகள் குடியிருப்புக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏரியாகவும் குளங்களாகவும் இருந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து அரசு குடியிருப்புகளை கட்டியதால் மழை நீர் அங்கு தேங்குவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மில்லர்புரம் பகுதியிலும் சாலையில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. அதே போல கோவில்பட்டியில் 73 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அங்குள்ள காய்கனி மார்க்கெட் பகுதியில் கோணலாக அமைக்கப்பட்ட வடிகால் பாலத்தில் குப்பைகள் சேர்ந்து மழை நீர் வடிவதில் தடை ஏற்பட்டு மார்க்கெட்டிற்குள் மழை நீர் வெள்ளம் போல் புகுந்தது.

மார்க்கெட்டிற்குள் பல கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதியடைந்தனர். சில வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. போதிய வடிகால்கள் இல்லாததும், மழை நீர் செல்லும் வழியை பிளாஸ்டிக் பைகள், மற்றும் கவர்கள் உள்ளிட்டவை அடைத்துக் கொள்வதாலும் மழை நீர் வடியாமல் குளம் போல தேங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top