பாஜகவுக்கு மாற்று மாநில கட்சிகளே! பீகாரில் தேஜஸ்வி காலை வாரிவிட்ட காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் 19-ல் மட்டுமே வெற்றி பெற்றதால் மெகா கூட்டணியால் பெரும்பான்மை இடத்தை பிடிக்க முடியாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது.இதிலிருந்து மாநிலகட்சிகளே பாஜகவுக்கு மாற்றாக கருதப்படுகிறது

பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியிருந்தன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 144 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும், 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சிக்கு 19 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகளில் 144 தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 12-ல் வெற்றி வாகை சூடியது. அதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் 50 சதவீத வெற்றியை அறுவடை செய்தன.

ஆனால் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது. தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து இருந்தாலும் இடங்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது துரதிருஷ்டமாகும். பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மிக பலவீனமாக இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மெகா கூட்டணியில் தேஜஸ்வி மிக சிறப்பாக தேர்தல் பிரசாரம் செய்து மக்கள் ஆதரவை திரட்டினார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் மக்கள் ஆதரவை திரட்டி இருந்தால் தேஜஸ்வி முதல்-மந்திரி பதவியை எட்டி பிடித்திருக்க முடியும்.ஆனால், காங்கிரஸ் மாநிலக்கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பழகி விட்டது மற்றும் உட்கட்சி பிரச்சனை வேறு , பாதி காங்கிரஸ்காரர்கள் பாஜக கருத்துக்களை சுமந்து திரிகிறவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் மக்களிடம் பாஜகவுக்கு மாற்றாக நிலைகொள்ளவில்லை. பீகார் தேர்தல் தமிழகத்திற்கு குறிப்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு பாடமாக அமையலாம்.  

இந்த தேர்தலில் காங்கிரஸ் நிலைபாட்டாலும் ,பாஜகவின் சூழ்ச்சியாலும் இஸ்லாமியர்களின் வாக்குகளை ஓவைசி கட்சியும், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை சிராக் பஸ்வான் கட்சியும் தெள்ளத்தெளிவாக பிரித்து விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இன வாக்குகளும் பெருவாரியாக கிடைக்காமல் போய்விட்டது. அதே நேரத்தில் நிதிஸ் குமாருக்கு பாஜக செக் வைத்திருக்கிறது.இது தமிழகத்தில் அதிமுக –பாஜக கூட்டணிக்கு ஒரு பாடம்.அதிமுகவை  ஒன்றும்  இல்லாமல் பாஜக உடைத்து விடும் அபாயம் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தனக்கு வழங்கப்பட்டிருந்த 70 தொகுதிகளில் கூடுதலாக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் பீகார் சட்டசபை தேர்தலின் முடிவே வேறு விதமாக அமைந்திருக்கும்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பீகார் சட்டசபை தேர்தலை மிக கவனமாக அணுகி இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. ராகுல் மட்டுமே வந்து சில கூட்டங்களில் பேசினார்.

இது குறித்து பீகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், “நாங்கள் பிரசாரத்துக்கு முழுக்க முழுக்க தேஜஸ்வியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகாருக்கு வந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படவில்லை. இதனால்தான் காங்கிரசை மக்கள் புறக்கணித்து உள்ளனர்” என்று வேதனையோடு தெரிவித்தனர்.

இதற்கிடையே பீகார் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் கூறுகையில், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளில் சுமார் 35 தொகுதிகள் மிகவும் மோசமான தொகுதிகள் ஆகும். அந்த இடங்களில் ஆர்.ஜே.டி. ஜெயிக்காது என்பதால் எங்களிடம் தள்ளிவிட்டனர்” என்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், “தேர்தலுக்கு முன்பே வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு வாங்கி இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு மோசமான சரிவு ஏற்பட்டிருக்காது” என்றனர்.

பீகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் குமார் இந்த குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக அறிவித்து உள்ளார்.

பீகாரில் காங்கிரஸ் கட்சியால்தான் தேஜஸ்வி ஆட்சியில் அமர முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரபரப்பாக வர தொடங்கி உள்ளன. இது காங்கிரசுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதைக்கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழுவில் அடுத்தகட்ட மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top