இந்தியப் பயன்பாட்டுக்கு நெருக்கடி; ஃபைசர் தடுப்பூசிக்கு மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தேவை!

அமெரிக்க- ஜெர்மனி நிறுவனமான  ஃபைசர்- பயோஎன்டெக் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதால் இந்தியாவுக்கு கடினம் எனக் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்க- ஜெர்மனி ஃபைசர் நிறுவனம் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது 90 சதவீத பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்தியாவும் இந்த தடுப்பு மருந்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது. ஆனால், இந்த மருந்து -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமாம். இது இந்தியாவில் மிகக்கடினம் என்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த மருத்துவ வல்லுனர்களில் ஒருவரான ரந்தீப் குலேரியா கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரந்தீப் குலேரியா கூறுகையில் “இந்த தடுப்பூசி மருந்தை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் அது மிகவும் சவால் ஆனது. குறிப்பாக கிராமப்புறத்தில் கடினம். இருந்தாலும் 3-ம் கட்ட சோதனையில் இந்த செய்தி வெளியானது ஊக்கம் அளிப்பதாக உள்ளது’’ என்றார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு கார்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றமும் பின்னடைவும்  அடைந்து வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது.

இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. ஜூலை 27-ம் தேதி 3-ம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியது.

இந்த பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43 ஆயிரத்து 538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் மொத்தம் 38 ஆயிரத்து 955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஃபைசர்- நிறுவனத்தின் தலைவர் ஆல்பர் கூறுகையில், ‘‘மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் இன்று மிகச்சிறந்த நாள். 3-ம் கட்ட பரிசோதனையின் முதல் முடிவுகள் எங்கள் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்பற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளது என்பதை உறுதி செய்கிறது’’ என்றார்.

ஃபைசர்-நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது. மேலும், இந்த தடுப்பூசியால் மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top