வி.பி.எஃப் பேச்சுவார்த்தை தோல்வி; புதுப்படங்கள் வெளியீடு இல்லை: தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

திரையரங்கு உரிமையாளர்கள் – க்யூப் நிறுவனம்- வி.பி.எஃப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், புதுப்படங்கள் வெளியீடு இல்லை தயாரிப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை -நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. எனினும் புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் – திரையரங்கு உரிமையாளர்கள் – க்யூப் நிறுவனம் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நிலையிலேயே இருந்தது. ஆனால் சுமுகமாக முடிந்து, தீபாவளிக்குப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வி.பி.எஃப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

புதுப்படங்கள் எதுவுமே வெளியீடு இல்லை என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தற்போது வி.பி.எஃப் சம்பந்தமாக அனைத்துத் தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புதுப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிகத் தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம்.

எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில் நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.  என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தீபாவளிக்கு எந்தவொரு புதிய படமும் வெளியாக வாய்ப்பில்லை என்பது தெரிய வருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top