கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு நடந்த இடங்களை ஆவணப்படுத்தும் பணியின் போது நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதில் 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று, கடந்த மாதம் 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த அகழ்வாராய்ச்சியின் போது, மண்பாண்ட ஓடுகள், எடைக்கற்கள், தங்க நாணயம், சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றதால், அதன் பின்னர் புதிதாக குழிகள் ஏதும் தோண்டப்படவில்லை. இதைதொடர்ந்து, தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழடியில் ஏற்கனவே ஒரு குழியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அதன் அருகில் உள்ள மற்றொரு குழியிலும் செங்கல் கட்டிடத்தின் தொடர்ச்சி போல் தெரிந்தது. இந்த செங்கல் கட்டுமானத்தை ஆவணப்படுத்தும் பணிக்காக தொல்லியல் துறையினர் அந்த 2 குழிகளையும் இணைத்து ஒரே குழியாக மாற்றிய போது அங்கு நீளமான செங்கல் சுவர் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இந்த செங்கல் சுவரின் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top