செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!

செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் அருந்ததியர் பாளையத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் கதிரவன் (வயது 13). வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கதிரவன் இடிபாடுகளில் சிக்கி நேற்று முன்தினம் இறந்தான். அவனது உடல் செஞ்சி அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சிறுவனின் உடலை அடக்கம் செய்ய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை. எனவே கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி தாசில்தார் ராஜன், நல்லான்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கிராம மக்கள், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி செய்து தருமாறு கேட்டனர். அதற்கு தாசில்தார் ராஜன், விரைவில் பாதை வசதி செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top