ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்;கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் அறிக்கை

7.5 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் புரோஹித்தின் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் அறிக்கை

தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, போட்டி மாநில அரசை நடத்தி வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீடு உறுதி செய்த பின்னர்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை ஆளுநர் கருத்தில் கொண்டு உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“பாஜக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் ‘நீட்’ தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்து, சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளால் வழிநடத்தப்படும் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட்டுத் தடைசெய்வது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, போட்டி மாநில அரசை நடத்தி வருகிறார். மாநில முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களையும் நிராகரித்து மாவட்ட, மாநில அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்துவதில் தொடங்கிய அதிகார அத்துமீறல், ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, தற்போது அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சட்டபூர்வ கல்வி பெறும் உரிமையை மறுக்கும் உச்சத்தை எட்டியுள்ளது.

ஆளுநர் புரோஹித்தின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசின் முதல்வர், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக இயக்கத் தலைவர்கள் ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்கக் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்னரும் ஆளுநர் அலட்சியம் காட்டுவது தமிழ்நாட்டு மாணவர்களையும், சமூக நீதி சார்ந்த ஜனநாயக சக்திகளையும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆளுநர் உணர்ந்துகொள்ள வேண்டும். இளநிலை மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் ஒதுக்கீடு உறுதி செய்த பின்னர்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.

இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top