நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி; இணையதளத்தில் இருந்து நீக்கம்! மீண்டும் வெளியீடு.!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து சர்ச்சை வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டுள்ளது

நடப்பு கல்வியாண்டில்  மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கொரோனாவால்  நீட் தேர்வை எழுதாமல் விட்ட சுமார் 290 பேருக்கு அக்டோபர் 14ல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இத்தேர்வில்  நாடு முழுவதும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 556 ஆவர். அதிகபட்சமாக மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 943 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயிப் அப்தாப்பும், டெல்லியை சேர்ந்த அகன்கா சிங் இருவரும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  நீட் நுழைவுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது இதுவே முதல் முறையாகும். டைபிரேக்கர் அடிப்படையில் மாணவர் சோயிப் அப்தாப் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.  தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளி விவரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 3,536 பேர் நீட் தேர்வு எழுதிய  நிலையில், 88,889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைபோல், உத்தரகாண்ட மாநிலத்தில் 12,047 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 37, 301 பேர் தேர்ச்சிப் பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே, தேர்ச்சி குறித்த  புள்ளிவிவரங்கள் அடங்கிய புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று மாலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக புதிய திருத்தப்பட்ட  பட்டியல் சற்று நேரத்தில் நீட் இணையதளத்தில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணைய சேவை முடக்கம், காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பின் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top