விஜய்சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் ‘800’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு;பின்னணி தகவல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்  முத்தையா முரளிதரனின் பயோபிக் விஜய்சேதுபதி நடிக்கும் ‘800’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு; அதிர்ச்சியான பின்னணி தகவல்

தமிழீழத்தில் நடந்த  இனப்படுகொலைக்கு பிறகு இலங்கை அரசுக்கு உலக அளவில் நெருக்கடிகள் வந்தாலும் அது பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளோடு கைக்கோர்த்துக்கொண்டு தன்னை காத்துக்கொண்டுவருகிறது. ஆனால், அது தொப்பில் கொடி  உறவான தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் அயலக தேசத்திலும் தன் மீதான இனப்படுகொலையாளன் என்ற முகத்தை மறைக்க முடியாமல் திணறுகிறது.

தமிழர்கள் மத்தியில் தன்னை பாதுகாப்பதற்கான பல உத்திகளை இலங்கை அரசு கைக்கொண்டு வருகிறது. அதில் ஓன்று பண்பாட்டு படையெடுப்பு.தமிழர்கள் அதிகம் நேசிக்கும் சினிமா-திரைப்படத் துறையில் படத் தயாரிப்பாளராக பல பினாமி பெயர்களில் வந்து தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் விடுதலை இயக்கத்தின் பெயரை கெடுக்கும் வண்ணம், விடுதலை போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் படங்கள் எடுத்து தமிழர்கள் மத்தியில் விடுதலை போராட்டம் குறித்தான மாற்று பிம்பத்தை உருவாக்க நினைத்து சில தரங்கெட்ட படங்களை எடுத்தன,  அது தமிழர்களிடையே தோல்வியையும் சந்தித்தது என்பது தனிக்கதை  

தற்போது ,அதன் நீட்சியாக  இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் தமிழருமாகிய  முத்தையா முரளிதரனின் பயோபிக்கை மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான்.

அப்போது அவருக்குச் சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாகக் கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க, தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும்போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை எனச் சிக்குகிறார். அந்தத் தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.

இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது” என்று தெரிவித்தார்.

தமிழர்கள் மிகவும் நேசிக்கும் நடிகர் விஜய் சேதுபதி அவர் இந்த படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது அனைவருக்குமான விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மிகவும் கஷ்டப்பட்டு பல இன எதிர்ப்புகளையும் மீறி இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கும் ஆளுமையாக மட்டும் விஜய் சேதுபதி பார்த்திருப்பார்.

2009 க்கு பிறகான இலங்கை அரசியலில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் இரத்தம் தோய்ந்த கரங்களை வலுபடுத்த துணை நின்றவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்பதை நடிகர் விஜய் சேதுபதி பார்க்க தவறியிருப்பார்.

கடுமையான எதிர்ப்பு இடையில் இந்த படம் மார்ச்சில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் மே பதினேழு இயக்கம் வெளியிட்ட இது குறித்தான அறிக்கையில் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார்கள் இது நடிகர் விஜய் சேதுபதி கவனத்தில் கொள்வது நல்லது

“பிறப்பில் தமிழராக இருப்பதாலேயே ஒருவரை தமிழினத்தின் பெருமையாக கருதிக் கொள்ளும் அரசியல் நமக்கு கிடையாது. அதுவும் ஒரு இனப்படுகொலை அரசை எவ்விதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்காமல், தனது வளர்ச்சிக்காகவும், தனது சுயநலத்திற்காகவும் ஆதரித்த ஒருவரை விளையாட்டு வீரராகவும், தமிழராகவும் நாம் பார்த்துவிட இயலாது. உலகெங்கும் பல விளையாட்டு வீரர்கள் அரசின் பயங்கரவாதங்களை, இனவெறியை, படுகொலை போர்களை, மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எதிர்ப்பினை தெரிவித்து இருக்கிறார்கள். இதனாலேயே தண்டிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டும் இருக்கிறார்கள். தாம் விலக்கப்படுவோம் எனத் தெரிந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பல வீரர்களை உலகம் கண்டிருக்கிறது. பிற நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து விலக்கம் செய்யப்பட்ட வீரர்களே உண்மையான விளையாட்டு வீரர்களாக போராட்ட உலகம் நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இந்நிலையிலேயே நாம் இலங்கையின் முத்தையா முரளிதரனை மதிப்பிட இயலும்.

மேலும், இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்கவும் செய்தது. இவ்வாறு இலங்கை விளையாட்டு வீரர்களை தமிழர்கள் புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள்”.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top