யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்க லாயக்கில்லை; மாயாவதி ஆவேசம்

முதல்வராக இருக்க லாயக்கில்லை, யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் மடத்துக்கோ, அயோத்திக்கோ அனுப்பி விடுங்கள், : தலித் பெண் சம்பவத்தை அடுத்து மாயாவதி ஆவேசம்

ஹத்ரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதனைத் தொடர்ந்து பலராம்பூரில் அதே போன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஆகியவற்றுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் தலைவர் மாயாவதி, யோகி ஆதித்யநாத் ஆட்சியில் குற்றவாளிகள், மாஃபியாக்கள், பாலியல் வன்கொடூரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்று சாடினார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை, இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது, “ஹத்ரஸ் தலித் பெண் கொடூர சம்பவத்துக்குப் பிறகாவது யோகி அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்பினோம். ஆனால் பல்ராம்பூரில் இதே போன்று தலித்துக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது.

பாஜக ஆட்சியில் கிரிமினல்கள், மாஃபியாக்கள், பாலியல் வன்கொடூரக்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொள்ளவில்லை எனில், மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் கொந்தளிப்பே ஏற்படும்.

கிரிமினல்களுக்கு எதிராக உ.பி.அரசு நடத்திய என்கவுண்டர்கள் நேர்மைக்கானதல்ல, அவை அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்டவையே என்று கூறுகின்றனர். விமர்சகர்கள் கூறுவது உண்மையெனில் அது வெட்கக்கேடானது.

இந்த ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் வெறுப்பில் உள்ளனர். அனைத்து வகையான குற்றங்கள் நிகழும் கால இடைவெளி குறுகியுள்ளது. உத்தரப் பிரதேச பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.

குறிப்பாக தலித் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை. ஹத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தைப் பார்த்துவர ஒரு குழுவை அனுப்பினேன். ஆனால் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். எங்கள் குழு அவர்களுடன் பேச்சு நடத்திய போது போலீஸார் அருகிலேயே கண்கொத்திப் பாம்பாக நின்று கொண்டிருந்தனர்.

பெண்ணின் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்காமல் எரியூட்டியது வெட்கக்கேடானது. இது காட்டாட்சி இல்லாமல் வேறு என்னவாம்?

கடந்த சில மணி நேரங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் பல நடந்துள்ளன. யோகி ஆதித்யநாத்துக்கு நான் கூற விரும்புவதெல்லாம் உங்களைப் பெற்றதும் ஒரு பெண் தான். அடுத்தவர்களின் பெண்களையும் உங்கள் பெண் போல் நீங்கள் காக்க வேண்டும். உங்களால் பாதுகாக்க முடியவில்லையா தயவு செய்து ராஜினாமா செய்யவும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பது போதாது, சம்பவங்களைத் தடுப்பதுதான் ஆட்சியின் கடமை. உ.பி. அரசு விழித்துக் கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். கொடுத்த நெருக்கடியில் யோகியை முதல்வராக்கியிருக்கலாம், ஆனால் அவரிடம் எந்த ஒரு திறமையும் இல்லை, ஆட்சி செய்வதற்கு அவர் தகுதியானவரும் இல்லை.

யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் மடத்துக்கு அனுப்பி விடுங்கள், அல்லது ராமர் கோயில் கட்டும் இடத்துக்கு அனுப்பி விடுங்கள். அவரது இடத்தில் திறமையான ஒரு முதல்வர் வரட்டும். யோகி ஆதித்யநாத் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதை பிரதமர் மோடிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே பிரதமர் உ.பி.யை பாதுகாக்க வேண்டும். யோகியால் உ.பி.யை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை எனில் வேறொருவரை முதல்வராக்குங்கள், இல்லையேல் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வாருங்கள்.

இப்போதைய ஆட்சியினால் ஒழுங்காக ஆட்சி நடத்த முடியவில்லை என்பதை 100% ஆணித்தரமாக நான் கூறுகிறேன். எனவே குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்து மக்கள் மீது கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்” என்று மாயாவதி கூறியுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top