நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிரசாந்த் பூஷண் மனு தாக்கல்

தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனக் கடந்த 14-ம் தேதி அறிவித்தது. அவரை மன்னிப்புக் கோரக்கூறி 3 நாட்கள் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் அளித்திருந்தது. ஆனால், மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிராசந்த் பூஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதமும், வரும் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், 3 மாதம் சிறையும், 3 ஆண்டுகள் பயிற்சி செய்யத் தடையும் விதிக்கப்படும்” எனத் தீர்ப்பளித்தது.

ஒரு ரூபாய் அபராதம் தொகையை செலுத்திவிட்டு மேல்முறையீடு செல்வேன் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து இருந்தார்

இந்நிலையில் தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியதாவது

“நீதித்துறை மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தவழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நான் ஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்தி விட்டேன் .ஆனால், இந்த தீர்ப்பைத் எதிர்த்து மறுஆய்வு மனுத் தாக்கல் செய்வேன் என்று சொல்லியது போல் மனுத் தாக்கல் செய்திருக்கிறேன்  எனக்கு என்ன தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளதோ அதை ஏற்கிறேன். நான் சிறைக்குச் செல்வதற்கும் அஞ்சவில்லை.

உச்ச நீதிமன்றத்தையோ, நீதித்துறையையோ மரியாதைக்குறைவாக எண்ணும் நோக்கில் என்னுடைய ட்விட்டரில் பதிவிடவில்லை. ஆனால், நீதிமன்றம் அதன் பணியிலிருந்து விலகுவதாக நான் உணர்ந்தால் அது குறித்து என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன்.

இது பேச்சு சுதந்திரத்துக்கான திருப்புமுனையான தருணமாக கருதுகிறேன், இதன் மூலம் ஏராளமான மக்கள், அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top