நீட் தேர்வு நிபந்தனைகள் சட்டவிரோதமானது; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.சிசிடிவி பொருத்தி கண்காணிக்கும் நிலையில் இந்த நிபந்தனைகள் சட்டவிரோதமானது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு இடையில் சுப்ரீம்கோர்ட்டின் ஆணைப்படி கடந்த செப்.13ம் தேதி நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் மிகுந்த சிரமத்தோடு இந்த நீட் தேர்வை எழுதினர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த சோதனைக்கு பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அரைக்கை சட்டை அணிந்துவர வேண்டும். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம், பெல்ட், வாட்ச், தொப்பி போன்ற எதுவும் அணியக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தகூடாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணமான விண்ணப்பதாரர்களை தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தி கண்காணிக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top